Friday 31 May 2013

கலைஞரும்,நானும் குறுகிய காலத்து தோழமைகள்….!


அவரது அறிவின் பயணம் ஆரம்பிக்கபட்ட வயதில் கால்வாசி வயது தான் எனக்கு..ஆனால் அவரது எழுத்துக்களும் தமிழ் உணர்வும்,அரசியல் நாகரீகமும்,அடக்கமுறும் வார்த்தைகளும்,எளிதான நகைச்சுவையும்,அதிரடியான பதில்களும்,குடும்ப உறவுகளின் மீது உள்ள பாசமும்.


எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது கலைஞர் எனக்கும்,ஆண்களுக்குமான எல்லா உறவுகளையும் அவர் உருவாக்கியிருக்கிறார் என்றே உணர்கிறேன்.தாத்தா,மாமா,அப்பா,அண்ணன்.தோழன்,முக்கியமாக என்னையும் படிக்கத்தூண்டிய பத்திரிக்கையாளர்,படைப்பாளி,உண்மையான உழைப்பாளி,


இப்படியான ஒவ்வொரு பரிமாணங்களிலும் அவர் என்னைக்கவர்ந்தவர்.என் அப்பாவின் பேச்சிலும்,என் கணவரின் ரசிப்பிலும் கலைஞரை மேலும் சுவாசிக்கத்தொடங்கிவிட்டேன்.
கடந்த பத்து ஆண்டுகளாக அரசியல் அனுபவம் நிறைய என்னை ஆட்கொண்டு இருந்து இருக்கிறது.

அதன் மீது நான் நடக்க ஆரம்பித்தபோது என்னைக் கையை பிடித்து அழைத்துச் சென்று,அரசியலில் எல்லாம் பார்க்கலாம் என்று காண்பித்தவர் கலைஞர் அவர்கள் தான்.


கலைஞருக்கு பகுத்தறிவு பார்வை இருந்தாலும்,என்னை பகுத்தறிவு பாதைக்கு அழைத்துச்சென்ற பெரியாரைப்போல,அவரது புத்தகங்களைப்போல…,வாழ்க்கையில் தாம் எடுத்த ஒரு முடிவை எப்படிக் கையாள்வது என்று நான் கலைஞரிடம் தான் கற்றுக்கொண்டேன்.


இன்றும் பிர பல பத்திரிக்கைகளைப்பற்றி விமர்சனம் செய்கிறாய்,மேலிடத்தை பகைத்துக்கொள்கிறாய்,எதற்கும் சமாதானமாகப்போ எல்லோரும் ஒருநாள் உனக்கு பயன்படுவார்,நாளைக்கு அந்த சேனல்களில்,பத்திரிக்கைகளில் கூட உன் பெயர் இடம் பெறும் என்றெல்லாம் எச்சரிக்கை மணி அடித்தனர் தோழமைகள்.


ஆனால் எனக்கு என்று ஒருமனம் உள்ளது,மானமும் உள்ளது.அதனால் நான் என்றும் திமுக தலைவர் கலைஞர் பக்கம் தான் சாய்வேன்.அதற்கு அடுத்து அமரும் திமுகவின் தலைமையை பற்றி விமர்சனம் ஆயிரம் இருந்தாலும் என்னைப்போன்றோர்,இன்று படித்து,எழுத,நல்லவேளைக்குச்செல்ல,எதிர்த்து கேள்வி கேட்க,பத்திரிக்கை சுதந்திரம் பற்றிப்பேச,என எல்லா உரிமைகளையும் பெற்றுத்தந்த பெரியார்,அண்ணா,கலைஞர் போன்றவர்களும்,திராவிட இயக்க கொள்கைகளும், தான் காரணம்.


அவர்கள் கஷ்டப்பட்டு பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று கோவில்களில் உள்ள பூசாரிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு,மூட நம்பிக்கையுடன் பணம்,காசு,பதவி வந்து விழுமா என்ற காக்கா கூட்டம் வட்டமடிக்கும் கரண்ட் இல்லா கம்பிகளை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருக்கிறோம்.


இயல்பையும் மீறி என்னுள் இருக்கும் கோபத்திற்கு காரணம் ஜெ அரசு நடத்தும் அரசியல்.அதிலும் கலைஞர் எதிர்ப்புக்காக எழுதவில்லை.எனக்கு தனிப்பட்ட ஜெ வின் மீதான விமர்சனம் அவ்வளவே.



கலைஞரின் பிறந்தநாள் அன்று கூட அவரை கேவலமாக விமர்சிப்பவர்களைக்கூட எள்ளி நகையாடிவிடுவார் தன் புன் சிரிப்பால் கலைஞர்.அந்த நகைச்சுவை உணர்வு நாயகனின் உதட்டோர பூக்கும் புன்னகைதான்..இன்று என் போன்றோர் கவனிக்க வேண்டிய விசயம்.எத்துணை கோபம் வந்தாலும் பொறுமையான உன் மவுன சிரிப்பைக்காட்டு,அடுத்தவன் உன்னிடம் தோற்றுப்போவான்.என்ற நகையாடலின் உரையாடலைத் தான் கலைஞர் சொல்லாமல் சொல்வது.


அவருக்கு 90 வயது நம்பமுடியவில்லை.எனக்கு 32 அதையும் நம்பமுடியவில்லை.அவரின் உழைப்பின் ஆலமரத்தில் இப்போது தான் விழுதாக விழத்தொடங்கினேன்.இன்னும் உறுதியான வேராக ஆக்கிக்கொண்டு ஆலமரத்தின் கிளைகளில் கையை கொடுத்து உறுதியாக்கிக்கொள்ள இன்னும் ஆண்டுகள் பல வேண்டும்.
அதற்கு என் ஆசிரியர் தான் தலைமை ஆசிரியராக இருந்து என்னை தன் மாணவியாக பாவித்து நல்ல மதிப்பெண் மற்றும் அல்லாமல் நற்சான்றிதழ் வாங்கவும் வழிநடத்த வேண்டும்.


நான் நேரடியாக கலைஞர் அவர்களுடன் தொடர்பில்லாமல் இருக்கலாம்.ஆனால் அவரது வாசகங்கள்,பேச்சுக்கள் இவற்றைப்பார்த்து வளர்ந்துகொண்டு வருகிறேன்.மேலும் அவரை கண்கொட்டாமல் பார்த்துப் பார்த்து வளர வேண்டும் என்பது தான் என் ஆசை…


அந்த ஆசையை கலைஞரும் நிறைவேற்றுவார்.அந்த ஆசையை மேலும் பேராசையாக்கி,உழைப்பு என்னும் உன்னதமான உயிரை பயிராக விளைத்து,அதற்குத்தினமும் தண்ணீர்,உரம்,பாசனம் எல்லாம் போட்டு அதில் கிடைக்கும் பயிரை என் பாசத்தலைவனுக்கும்,இந்த மக்களுக்கும் பரிசாகத்தருவேன்…

வாழ்க பெண்ணை…..பொன்னாக விளைத்த பெரியார்,அண்ணா,கலைஞர்,திராவிட இயக்க கொள்கைகள்……….
கலைஞரின் பிறந்தநாளுக்கு என்னுடைய பரிசு இந்த எழுத்து..காணிக்கை செலுத்தவில்லை.காணற்கரிய எழுத்தின் படைப்பாளிக்கு……சின்னப்பிள்ளையின் மிட்டாய் (எழுத்து) அவரின் பிறந்தநாள்….பரிசு…..! 

No comments:

Post a Comment