Friday 28 June 2013

விட்டுக்கொடுத்தால் எல்லா இரவும் நல் இரவு தான்..!


என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிறாய்…..??

காலையில் கணவன் கேட்ட கேள்வி மனைவிக்கு ஒருமாதிரியாக இருந்தது.என்ன சொல்வது என்று புரியவில்லை.இதையெல்லாம் கேட்டால் ஏன் என் செல்போன்…பேஸ்புக் இதையெல்லாம் செக் பண்ணுகிறாயா…?என்னை சந்தேகப்படுகிறாயா…?என்பது போன்று கேள்விகள் தன் கணவரிடமிருந்து வரும் வீணாகப்பிரச்னை என்று நினைத்து மவுனம் காத்தாள் அவள்.


அவனும் ஆபிஸூக்கு டைம் ஆவதால் கிளம்பிவிட்டான்.அப்பாடா தப்பித்தோம் என நினைத்தாள் மனைவி.


ஆனால் கணவன் விடவில்லை.இரவு ஆபிஸ் முடிந்து வந்ததும்,சாப்பிட்டுவிட்டு..படுக்கைக்குச் சென்றான்..தன் மனைவியை படுக்கையில் அவளை அமர வைத்து ”உனக்குள் என்ன பிரச்னை என்னிடம் சொல்”.என்று மறுபடியும் கேட்டான்.


இவளால் பதில் சொல்லாமல் தப்பிக்கமுடியவில்லை.அதே நேரம் அழுகையும் கண்ணை முட்டிக்கொண்டு வந்தது.அழ ஆரம்பித்துவிட்டாள்.


என்ன ஆச்சு ஏன் இப்படி அழறே..?எதா இருந்தாலும் சொல்லு…சொல்லாமல் அழதா நான் என்ன பண்றது.ப்ளீஸ் அழுறத நிறுத்து.என்று அவளது கண்ணில் வரும் கண்ணீரை துடைத்துவிட்டான்.


இவ்வளவு அன்பாக நடந்துகொள்கிறாரே நம் கணவர் இவரைப்போயா நாம் சந்தேகப்பட்டோம் ? என்று ஒரு நிமிடம் மனசஞ்சலப்பட்டாள்.ஆனால் அவன் அந்த பெண்ணிற்கு அனுப்பிய இன்பாக்ஸ் மெஸெஸ்கள் மறுபடியும் ஞாபகத்திற்கு வந்து மேலும் அழுகையை கூட்டியது.


சொல்லிவிடுவது என முடிவெடுத்து,”நீங்க பண்ணுவது சரியா,நான் உங்க மனைவி இருக்கும் போது,நீங்க செல்போனிலும் ,முகநூலிலும் ஒரு பெண்ணுக்கு வழிந்து எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கீங்க..நான் தற்செயலா உங்க செல்போனை பார்த்தேன்.அதில் இருந்த அந்த பெண்ணின் மெஸேஸ் படித்ததும் எனக்கு சந்தேகம் வந்தது.


அதனால் தான் ஒருநாள் நீங்க பேஸ்புக்கில் இருக்கும் போது போன் வந்துடுச்சு எந்திரிச்சு போய்ட்டீங்க..அப்போ திருட்டுத்தனமா நான் உங்களோட பேஸ்புக் இன்பாக்ஸை திறந்தேன்.

அதில் அப்பெண்ணுக்கு நீங்க வழிந்து கொண்டு நீதான் என் தோழி அப்படி இப்படினு என்னைப்பற்றிய குறைகளையும் கூட பகிர்ந்து இருக்கீங்க.அது எனக்குப்பிடிக்கல..அப்பெண் யார்…?அவள் என்னைவிட அவ்வளவு முக்கியமா…?”என்று தன் மனதில் தோன்றிய உணர்ச்சிக் கோபத்தை, கணவனிடம் படபடவென்று கொட்ட ஆரம்பித்தாள்.


கணவனின் முகம் மாறியது.இத்தனைநாள் இந்தப்பிரச்னையால் தான் இவள் இப்படி இருந்து இருக்கிறாள் என்று யோசனையில் ஆழ்ந்தான்.
மவுனம் காத்தான்.இவளும் நன்கு அழுது தீர்த்துவிட்டு,அமைதியாக அமர்ந்து இருந்தாள்.


சிறிது நேரம் கழித்து,அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

”தெரிந்தோ,தெரியாமலோ…அப்பெண்ணுக்கு கொஞ்சம் கூடுதல் உரிமையாக மெஸேஸ்கள் அனுப்பியிருந்தால் என்னை மன்னித்துவிடு.

நான் தவறான எண்ணத்தில் அப்படி அனுப்பவில்லை.ஆனால் இன்னொரு பெண்ணுக்கு கொஞ்சம் கூடுதல் உரிமை எடுத்துக்கொண்டு எஸ் எம் எஸ் அனுப்பியிருப்பதை எந்த மனைவி பார்த்தாலும் இப்படித்தான் கோபப்படுவார்கள்.

நீ சந்தேகப்பட்டு பார்த்ததை நான் தவறாக நினைக்கவில்லை.இனிமே நீ என் செல்போன்,முகநூல் இதையெல்லாம் பார்க்கலாம்.என்னுடைய பாஸ்வேர்டு உன்னிடம் சொல்லிவிடுகிறேன்.இனிமே நமக்குள் ஒளிவு மறைவு வேண்டாம்.

அந்தப்பெண் பேஸ்புக்கில் எனக்கு அறிமுகம் ஆனாங்க.அவங்க திருமணம் ஆனவங்க தான் கொஞ்சம் அன்போடு பேசியதால் நானும் மனவிட்டு பேச ஆரம்பித்தேன்.அதனால் கூடுதல் உரிமை எடுத்துக்கொண்டு இருக்கலாம்.

இனிமே அப்படியெல்லாம் அனுப்பல..எப்போவாவது அனுப்பினாங்க..போன் பேசினாங்க என்றால் மட்டும் கர்ட்டஸிக்கு பேசிட்டு வச்சுடுறேன்.அதையும் கூடிய விரைவில் கட் பண்ணிடுறேன்.


இதனால் நம் குடும்பத்திற்குள் பிரச்னை வரவேண்டாம்.எனக்கு நீதான் முக்கியம்,.அநாவசியமாக அடுத்த பெண்ணிடம் நான் பேசி என்ன ஆகப்போகிறது.”

ஆனா நீங்க அனுப்பிய மெஸேஸ்கள் எல்லாம் அதிக உரிமையுடனும்,அப்பெண்ணின் மீது அளவு கடந்த ப்ரியமுடனும் அனுப்பியிருந்தாக என் மனதிற்குப் பட்டது.அதுதான் பாதிப்பாகி விட்டது எனக்கு என்றாள்.

அதான் எல்லாவற்றையும் மறந்துவிடு..இனிமே நமக்குள் சந்தேகம் வரவேண்டாம்.சந்தேகம் வரும்படி நானும் நடந்து கொள்ளமாட்டேன்.என்றதும் கட்டியணைத்துக்கொண்டாள் அவள்..

அன்றைய இரவு நல் இரவாக ஆனது…..!


 .

Thursday 27 June 2013

பெண்களின் மருத்துவம்.....!


தைராய்டு பிரச்னைகளுக்கு இன்னும் முழுமையான மருத்துவம் ஏதும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

ஏனெனில்,தைராய்டு ஒருமுறை வந்துவிட்டால் தொடர்ந்து வாழ்நாள் வரை மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுமாகிறது.

காலையில் வெறும் வயிற்றில் அந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொருவரின் தைராய்டு அளவைப்பொருத்து அளவு 25 mg ,50 mg,100 mg, என்ற லெவலில் உட்கொள்ள வேண்டும்.


அதில் ஹைபோ தைராய்டு,ஹைப்ரோ தைராய்டு என்ற இரண்டு வகை தைராய்டு உள்ளது ஹைபோ என்பது லோ தைராய்டு. அதாவது,தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது.இதனால் உடல் எடை அதிகரிக்கும்.வழக்கத்தை விட நமது எடை கூடுதலாகும் போதே தைராய்டு செக் பண்ணிக்கொள்ள வேண்டும்.


சிலருக்கு உடல் எடை குறைவாகிக்கொண்டே போகும் என்ன சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காது.அவர்களும் கண்டிப்பாக டாக்டரை அணுகி தைராய்டு செக் பண்ணிக்கொள்ள வேண்டும்.

தைராய்டின் அறிகுறிகள்:

உடல் வலி,மூட்டு வலி,அதிகமான உடல் எடை,குறைவாகும் உடல் எடை,உடல் சோர்வு,கோபம்,கை,கால் நடுக்கம்,உடல் சூடாகவே இருத்தல் கழுத்துப்பகுதியில் வீக்கம்,முகம் வீக்கம்,இர்ரெகுலர் பீரியட்ஸ்,இவை எல்லாம் தைராய்டின் அறிகுறிகள் ஆகும்.

தைராய்டு பிரச்னை இப்போது பெண்களின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது.சிலர் கவனிக்காமல் விடுவதால் ஆப்ரேஷன் வரை கொண்டு போய் விட்டுவிடுகிறது.

கழுத்தில் நரம்பு பகுதியில் ஆப்ரேஷன் பண்ணுவார்கள்.அங்கு கட்டி போல் ஃபார்ம் ஆகிவிடும் தைராய்டு சுரப்பி அதை ரிமூவ் செய்வார்கள்.மேக்ஸிமம் ஆப்ரேஷனுக்கு போகாமல் தவிர்க்க வேண்டும்.


இந்த சுரப்பி மீண்டும் மீண்டும் வளரக்கூடியது தான் எனவே மாத்திரையிலேயே கரைக்க முற்பட வேண்டும்.

தைராய்டு கெவி ஆகிவிட்டால்.இரத்த ஓட்டம் கூட பாதிக்கப்பட்டு,சதைகளில் டிஷ்யூஸ் போல ஃபார்ம் ஆகிவிடும்.அது இன்னும் அதிகமான வலியை கொடுக்கும்.சதை இறுக்கமாகிவிடுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு இடுப்பு,கால்களில் பயங்கரமான வலி தோன்றி நடக்கக்கூட முடியாமல் ஆகிவிடும்.


அதனால் ஆரம்ப காலகட்டத்திலேயே தைராய்டை கண்டுபிடித்து சரியான மருந்து உட்கொண்டோம் ஆனால் இது ஒரு சாதாரண நோய் தான் முதிர்ந்துவிட்டால் இது ஒரு கொடிய நோய் ஆகிவிடும்.


இதற்கு அலோபதி மருந்து தவிர,ஆயுர்வேதம்,யுனானி,ஹோமியோ மருந்துகளில் கூட குணப்படுத்தலாம்,நாட்கள் கூடுதல் ஆகுமே தவிர சைடு எஃபெக்ட் ஏதும் நேராது.


அதும் கர்ப்பகாலத்தில் அதிகபட்ச கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் தைராய்டு இருக்கும் பெண்கள்.மாதந்தோறும் இதற்கான ஸ்பெஷல் மருத்துவரை நாடி செக் பண்ணிக்கொள்ள வேண்டும்.குழந்தையின் ஆரோக்கியம் பற்றி ஸ்கேன் மூலம் பரிசோதித்துக்கொண்டே வரவேண்டும்.


ஏனெனில் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை அம்மாவின் தைராய்டு பிரச்னையால் ஏதாவது ஒரு வகையில் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது.


எனவே கர்ப்பிணிப்பெண்கள் குழந்தையின் வளர்ச்சியை மாதந்தோறும் கவனித்து.போஷாக்கான உணவை டாக்டரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்ள வேண்டும்.


மருத்துவத்தை தொடர்ந்து அறிவோம்……..

Tuesday 25 June 2013

ருணவிமோசகர் சாமியோவ்.......!


தஞ்சாவூரில் உள்ள ஆயிரமாவது ஆண்டு பழமையான கோவிலான (ராஜராஜசோழனால் கட்டப்பட்ட) தஞ்சை பெரிய கோவிலையும் விட மிக பழமையான கோவில் திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் சாமி திருக்கோயில்.


ஆரூரா…தியாகேசா...


இச்சாமி தான் திருவாரூரின் சிறப்புமிக்க தான ”தேரில்” பவனி வரும் சாமி. தியாகராஜருக்கு கமலாம்பிகை என்ற காதலி உண்டு.அக்காதலிக்கும் தியாகராஜரின் மூலஜ்தானத்துக்குக்கு அருகில் ஒரு மண்டபத்தில் சிலையாக கமலாம்பிகை அமைக்கப்பட்டு,எல்லோராலும் (தியாகராஜரைவிட கமலாம்பிகையைத்தான்) முக்கியமாக வணங்கப்பட்டும் வருகிறது.


அவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை,திருவாரூரில் மூன்று விசயம் நடந்தால் தியாகராஜர் காதலி கமலாம்பிகையை கைப்பிடிப்பார் என்பது ஐதிகமாம்.


அதாவது,முதல் விசயமாக தியாகராஜர்  தன் பாதங்களை என்று முழுமையாக காண்பிப்பாரோ(வருடத்தில் ஒருநாள் மட்டும் தியாகராஜரின்  ஒருபாதம் மட்டும் அபிஷேகத்துக்கு காண்பிக்கப்படும். மற்றநாட்கள் எல்லாம்…அவர் தன் பாதங்களை யாருக்கும் காண்பிப்பது இல்லை.)


இரண்டாவது,கமலாலயக்குளம் வற்ற வேண்டும்…(கோவிலுக்கு முன்னால் குளம் ஒன்று உள்ளது.அக்குளத்தில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும் வற்றாது).


மூன்றாவது,கல்தேர் நகர வேண்டும். (கன்றினைக்கொன்றதால் தன் மகனை தேர்க்காலில் இட்டுக்கொன்ற மனுநீதிசோழன் வரலாற்றை சொல்லும் வகையில் திருவாரூரில் கல்தேர் ஒன்று செய்து வைத்து இருப்பார்கள்.)அந்தக் கல் தேர் எப்படி தானாக நகரும்…?


இம்மூன்றும் நடந்தால் கமலாம்பிகையை திருமணம் செய்துகொள்வதாக தியாகராஜர் வாக்குறுதி கொடுத்துள்ளார்…


ஆக.,இம்மூன்றுமே நடக்காது என்று தெரிந்தும் கமலாம்பிகையை ஏமாற்றி ஈவ் டீசிங் செய்து இருக்கிறார் தியாகராஜர்.சோ அவர் மீது ஈ பி கோ 320 கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்…


சரி அத விடுங்க…தியாகராஜராவது பரவாயில்ல..ஆயிரம் ஆண்டுகளா ஒரு பொண்ண தான் ஏமாத்திட்டு இருக்கார்.பட் நம்ம ருணவிமோசகர் இல்ல….அதாங்க கடைசியா சாமி கும்பிட்டு போகும் போது கைதட்டிட்டு காது கேட்குதான்னு கிண்டல் பண்ணிட்டுப் போவோம்ல..
அந்த சாமி தான்,அது கேட்பார் நாதியற்று பாழடைந்து கிடந்தது திருவாரூர் கோவிலில் ஒரு ஓரமாக..


சமீபத்தில் அக்கோவிலுக்குச் சென்று பார்த்தோம். வெள்ளிக்கவசம் அணிந்து,வெள்ளிக்கொடை எல்லாம் வைத்து சாமிக்கு லைட் எல்லாம் போட்டு ஜெகஜோதிலட்சுமியாய்…சாரி ஜோதியாய் மின்னினார்.


என்னங்கய்யா திடீர்னு ஆச்சு ”இச்சாமிக்கு வந்த வாழ்வைப்பாரேன்” என்று தியாகராஜரே பொறாமைப்படும் அளவுக்கு வளர்ந்துட்டார் ருணவிமோசகர்.


எவனோ கிளப்பிவிட்டு இருக்கான்.இந்த சாமியை கும்பிட்டா கடன் தொல்லை அடைந்து,மனதில் இருக்கும் பாரம் எல்லாம் இறங்கி சந்தோஷ வாழ்வு கிடைக்கும் என்று…


உடனே நம்ம மக்கள் கிட்ட கேட்கவா வேணும்…ஓடி ஒடி அச்சாமிக்கு காணிக்கை செய்கிறார்கள்.இதனால் ஆசாமிகள் கொழிக்கிறார்களோ இல்லையோ ருணவிமோசகர் நன்றாக கொழிக்கிறார்.


தினமும் பாலில் அபிசேகம் தான்,பொங்கல் தான். வெள்ளி ஆடைதான் கொடை தான் பளிச்சுனு லைட்டு தான் ,கலக்குற சந்துரு லெவலுக்கு கலக்குறாரு நம்ம ருணு..


ருணவிமோசகரிடம் திருநீறு வாங்கி பூசிக்கொண்டோம்னா…உங்க கடன் தொல்லை கண்டிப்பா நீங்கிடும்.


அதுனால இனிமே பேங்க்ல கூட கடன் வாங்கிட்டு நம்ம ருணுகிட்ட திருநீறு வாங்கிப் பூசிக்கோங்க……..அப்புறம் பாருங்க மகிமையை பேங்க்காரவங்க கூட கடனை திருப்பிக்கேட்க மாட்டாங்க..


நீங்க எஸ்கேப் ஆயிடலாம். மீறிக் கடனைத் திருப்பிக் கேட்டா எல்லாம் ருணவிமோசகர் தான்னு அவரை கைக்காட்டிவிட்டுடலாம்.


நமக்குத்தேவை கடன் பத்திரம் அல்ல..அல்ல…அல்ல….ருணவிமோசகருடை திருநீறு பொட்டலம்..பொட்டலம்..பொட்டலம்…….!

Friday 21 June 2013

கணவனின் இன்னொருமுகம்....!


ஒருநாள் ,தன் கணவனின் செல்போனை மனைவி பார்க்கும் சூழல் ஏற்பட்டது.நம்ம கணவர் தானே என்ன சொல்லப்போகிறார் என்று நினைத்த மனைவி போன் கால்ஸ்,மற்றும் மெஸேஸ்களை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்.


கணவனின் நண்பர்கள் பலர் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார்கள்.சில ஆண் நண்பர்கள்..ஒரு சில பெண் நண்பர்கள் என பலர் அனுப்பிய எஸ் எம் எஸ்களையும் படித்துக்கொண்டே வந்தவள்.ஒரு பெண் அனுப்பிய மெஸேஸ்கள் மட்டும் கொஞ்சம் நெருடலாக இருப்பதாக உணர ஆரம்பித்தாள்.


அப்பெண் கொஞ்சம் ஓவராக தன் கணவரின் மீது அன்பு கொண்டவர் போலவும்,ஆர்வம் போலவும் அனுப்பியிருந்ததைக்கண்டதும் பெண்ணுக்கே உரிய பொஸஸ்ஸிவ் அவளுக்குள்ளும் புகுந்து கொள்ள ஆரம்பித்தது.


இதுவரை அவள் கணவன் மீது சந்தேகம் கொண்டது கிடையாது,அதனால் கணவனைப்பற்றிய எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தாள். ஆனால் இப்போது ஏற்பட்ட சின்ன சஞ்சலத்தினால் அவளுக்கு ஆர்வம் அதிகம் ஆயிற்று. உடனே கணவனுடைய மெயில்,பேஸ்புக் ,டிவிட்டர் என செக் பண்ண நினைத்தாள்


எப்படியாவது கணவனின் அந்தரங்க விசயங்களை தெரிந்து கொள்ள முயற்சி எடுக்க ஆரம்பித்தாள்.

ஒருநாள் கணவன் பேஸ்புக் ஓப்பன் பண்ணி யிருக்கும்போது,போன் அடித்தது,உடனே கணவன் பேஸ்புக்கை லாக் அவுட் பண்ணாமல் அப்படியே விட்டுவிட்டு வெளியில் எழுந்து சென்றுவிட்டான்.இவள் அவசரமாக அவனது பேஸ்புக் அக்கவுண்டை நோட்டமிட ஆரம்பித்தாள்.


இன்பாக்ஸில் அந்த குறிப்பிட்ட பெண் மட்டும் அதிகமான உரிமை எடுத்துக்கொண்டு நட்போடும்,அதீத கரிசனத்தோடும், சாட் பண்ணியிருந்தாள்….பார்த்துக்கொண்டு வரும்போது இவளது கணவன் அந்தப்பெண்ணிடம் ஓவராக வழிந்து பேசியிருப்பது தெரிந்தது.


என் தோழி, உனக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்…நீ தான் எனக்கு எல்லாம்.உன்னிடம் மட்டுமே நான் உரிமை எடுத்துக்க முடியும்..நாம் சந்திக்கலாம்.என் மனைவி வந்துவிட்டாள் நான் செல்கிறேன்.இல்லையென்றால் கத்துவாள் என்பது போன்று வார்த்தைகள் இடம்பெற்று இருந்தன.


இவளுக்கு பயங்கரமான அதிர்ச்சி நமக்குத்தெரியாமல் இவ்வளவு தூரம் பேசியிருக்கிறார்.அதுமட்டுமல்லாது,அதிக உரிமை எடுத்துக்கொண்டும்,தன்னைப்பற்றி குறையையும் பகிர்ந்து கொண்டு இருந்து இருக்கிறார்.


நாம் அவர்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தோம்.அவருக்குள் வேறு ஒரு உலகம் இருந்து இருக்கிறது.நம்மிடம் இவ்வளவு நாள் நடித்துக்கொண்டு இருந்து இருக்கிறார்.


ஏன்,எதற்கு,நாம் இதுவரை அவரிடம் எதையும் மறைத்தது கிடையாதே..?எதற்காக நாம் இருக்கும் போது இன்னொரு பெண்ணிடம் இவர் இதுபோல் பகிர்ந்துகொள்கிறார் என்று அவளது மனதில் ஏகப்பட்ட கேள்விகளை சுமந்துகொண்டு அவசர அவசரமாக முகநூலில் இருந்து தன் பார்வையை நகர்த்தி வேறு பக்கம் சென்றுவிட்டாள்.


மனதிற்குள் ஏகப்பட்ட போராட்டம்,அவளது கணவன் அவளை ஏமாற்றிவிட்டதாகவே நினைத்தாள்.அன்றிலிருந்து அவளது கணவனை மனதுக்குள் வெறுக்க ஆரம்பித்தாள்.எதையும் கணவனிடமும் கேட்டுக்கொள்ளவில்லை.


கணவன் இயல்பாகவே இருந்தான்.ஆனால் அவனது மனைவியால் இயல்பாக இருக்கமுடியவில்லை.இரவு படுக்கையைக் கூட இவளால் சந்தோஷமாக களிக்க முடியவில்லை.இவன் அனுப்பிய மெஸேஸ்கள் எல்லாம் இவளது தூக்கத்தில் கூட நினைவில் வந்து இவளை தூங்கவிடாமல் செய்தது.


இப்படியாக நாட்கள் செல்ல ஆரம்பித்தன.கணவனுக்கு மனைவி ஏன் விலகியே இருக்கிறாள் என்பது குறித்து நாளடைவில் மனதிற்குள் தோன்ற ஆரம்பித்தது.


சந்தோஷமான இரவுகளில் கூட அவளுக்கு விருப்பம் இல்லாமையை அவளது செயல்பாடுகள் காட்டிக்கொடுத்தது.அவன் தன் மனைவியிடன் கேட்டேவிட்டான்.


என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிறாய்…..??தொடரும்………!

Saturday 15 June 2013

எல்லாருக்கும் வணக்குமுங்க…..!


நான் ஒரு நாடோடிங்க…..என்னடா,ஆரம்பத்திலேயே அறிமுகம் சரியில்லையேனு நினைக்காதீங்க…நானே என்னைப்பற்றி முழுமையா சொன்னபிறகு என்னைய புரிஞ்சுக்குவீங்கன்னு நம்புறேன்.

என்னால நடக்கமுடியாது,அதுனால என்னையத்தூக்கிட்டுத்தான் போவாங்க.ஒருத்தரால தூக்கமுடியும்,கொஞ்சம் வெயிட்டாயிட்டேன்னா…இரண்டு பேர் தூக்கிட்டு போய் மேடைல பேச நிக்கவச்சுடுவாங்க.

நானும் பலமுறை சொல்லிட்டேன்.என் பேச்சை ரொம்ப பேர் கேட்டுட்டே இருக்காங்க.எனக்கு அதுல விருப்பம் இல்ல.

சிலர்  நான் பேசுறதை நல்லதாக பேசுறாங்க,சிலர் அதையே சர்ச்சையா பேச ஆரம்பிக்கிறாங்க.அதுனால என்னைய விட்டுடுங்கப்பான்னு மெளவுனமொழில கூட கெஞ்சிப்பார்த்துட்டேன்.ஆனா விடமாட்டேன்றாங்க.

ஒரு சிலர் நல்ல விசயங்கள்,தகவலா தருகிறேன் என்று ஆர்வமுடன் கேட்டு ரசிப்பாங்க.அப்போதெல்லாம் சந்தோஷமா விசயங்களை வாரிவாரி வழங்குவேன்.

சிலநேரம் பார்த்தா எதிர்த்தாப்புல உட்கார்ந்து இருக்கிற,குழந்தை நம்மைளையே முறைக்குறமாதிரி இருக்கும். எப்படா,முடிப்ப என்பதுபோல்,
அப்போ எனக்கே கொஞ்சம் தயக்கமாயிடும்…ஓவரா தான் போறோமோ என்று…..!

சிலர் பேசிட்டு இருக்கும்போது மரியாதை தெரியாம கிளம்ப ஆரம்பிப்பாய்ங்க..

அப்போதான் ஒரு சோர்வு உண்டாகும்..என்னடா இவங்களுக்காக பேச நாம வந்து இருக்கோம்.ஆனா மரியாதை இல்லாம கிளம்பிப்போறாய்ங்களேன்னு வருத்தப்பட்டும் சில நேரம் பேசிக்கொண்டு இருப்பேன்.

ஒருநாள் நான் பேசிட்டு இருக்கும்போது,மேடையில் இருக்கும்  இருவருக்கு சண்டை  வந்து அடிச்சுக்குறாய்ங்க..என்னைய வேற அடிக்கடி பார்த்து,இவனையும் தூக்கி அடிக்கலாமா என்பது போல் முறைப்பாய்ங்க…அப்போ எல்லாம் மனதை கல்லாக்கிக்கொண்டு அமர்ந்து இருப்பேன்.
சரி,நான் பேசுவது சர்ச்சையாகுதா….?இனிமே பேச வேண்டாம் என்று கூட மவுனம் காப்பது உண்டு,ஆனா என்னையத்தட்டி உசுப்பேத்தி எப்படியாவது பேச வச்சுடுவாங்க.

எனக்கும் கம்மியா,அழகா,தீர்க்கமா, இன்னைக்கு பேசனும் என்று தான் ஒவ்வொரு தடவையும் பேச ஆரம்பிக்கும் போது நினைப்பேன்.
ஆனா ஒவ்வொரு வார்த்தையும் சொல்றப்ப நமக்கு தெரிந்ததை சொல்லனும்.நாம சொல்வதைக் கேட்டு இவர்களும் பயன்பெறட்டுமெ என்ற நல்ல எண்ணத்தில் ஃப்லோவா ஆரம்பித்து….அப்படியே எல்லாரும் மயங்குற நிலைமைக்குக் நானே காரணமாயிடுவேன்.

சிலசமயங்களில் எனக்கே பேசிட்டு,எனக்கே தலைச்சுற்றல் ஆரம்பமாகிவிடும்.

ஒவ்வொரு மேடையும் எனக்கு பல அனுபவங்கள் கொடுத்து இருக்கு.
ஆனா நான் யாரையும் ஒருபோதும் மரியாதை இல்லாம திருப்பிப்பேசமாட்டேன்.சில நேரம் என்மீது அமிழத்தை ஊற்றி கழுவும் அளவிற்குக்கூட எதிரில் இருப்பவர்கள் பேசுவார்கள்.அப்போதும் நான் அவர்களின் எதிரொலியாய் தான் இருப்பேன் தவிர திரும்ப காறி உமிழமாட்டேன்.

இப்போ புரியுதாங்க நான் எவ்வளவு நல்லவன் என்று என்னையப் புரிஞ்சுக்காம சட்டமன்றம் பாராளமன்றம்.ஏன் ஐநா சபை வரை கூட கூட்டிட்டுப்போய் ஆச்சரியப்படுத்துவாய்ங்க…

ஆனா அங்கேயும் சில சமயங்களில் எனக்கு சரியான மரியாதை தர்றது இல்ல. என்னைத்தூக்கி அடிச்சு அவங்க பேர் வாங்கிக்கப் பார்ப்பாங்க.
நான் எப்படிப்பேசினாலும்,என்னை வாய்யில்லாப்பூச்சியாத்தான் ஒருசிலர் பார்க்குறாங்க……

என் வளர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கும் இவர்களை நம்பிதான் நானும் இத்தனை நாட்களா வாழ்ந்துட்டு இருக்கேன்.

இதெல்லாம் வேண்டாம் நாமதான் நல்லாப்பாடுவோமே என்று  பாட ஆரம்பிச்சா….அதுக்கும் நல்லாயிருக்கு,நல்லா இல்ல என்று ஆயிரம் விமர்சனங்கள் என் மீது,இதெல்லாம் தாங்கிட்டு நான் ஏன்….?நான் ஏன்..?

நான் ஏன் இப்படியே இருக்கேன்ன்ன்னா……………..

சரி என்னைய நம்பியும் ஒரு குடும்பம் இருக்கே….என்ற நல்லெண்ணத்தில் தான்.

இப்ப சொல்லுங்க நான் எவ்வளவு நல்லவன்னு……?

நான் யாருன்னு தெரிஞ்சிட்டீங்களா…?

:
:
மைக்கு…..மைக்கு………..!

Friday 14 June 2013

இச்சைக்கு அடிமையாகி பேப்பரில் தலைப்பு செய்தி ஆகிவிடாதீர்கள்.....!



கேள்விகள் சாதாரணமாக அமைந்துவிடலாம்….ஆனால் அதற்கான பதில்கள் இருக்கிறதே மிகவும் கடினம்..சென்ற வார வெள்ளிக்கிழமை ப்யூட்டிபார்லரில் ஒருபெண் போனில் பேசிய அதுவும் மறைமுக நபரிடம் பேசியதை பகிர்ந்துகொண்டேன்.

அதுபற்றி நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.அப்பெண் அப்படி என்ன தவறு செய்துவிட்டாள்,இன்றைய காலகட்டம் அப்படித்தானே செல்கிறது.அதுமட்டுமல்லாது நீங்கள் ஒரு இஸ்லாமியபெண்ணை குற்றம் சொல்கிறீர்கள்….அவர்கள் அப்படி எல்லாம் செல்லக்கூடியவர்கள் அல்ல….என்பது போன்ற எதிர்ப்பான விசயங்கள் என்னை தாக்கின.

ஆனால் உண்மை சம்பவத்தை சொல்வதற்கு மதமும்,பிரச்னைகளும்,சமூகச்சூழல்களும் எனக்கு ஒன்றாகத்தான் தெரிந்தன.இதில் மூடுமந்திரம் போட்டுக்கொண்டோ….மறைத்து வைத்துக்கொண்டோ  விசயங்களை வெளியிடுவதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. அதுபோல குறிப்பிட்ட யாரையும் குற்றம் சுமத்துவதும் எனது நோக்கமல்ல.

என்ன நடந்ததோ…அதைச்சொல்வதிலும்,அந்தப் பிரச்னைக்கான மையப்புள்ளியை கண்டறிந்து,தீர்வை தேடுவதிலும் தான் நான் என் இக்கட்டுரைக்கான பயணத்தை மேற்க்கொள்ள நினைக்கிறேன்.

அப்பெண் செய்ததில் என்ன தவறு?அவள் தன் கணவன் சரிவர கவனித்துக்கொண்டு இருக்கமாட்டான்.ஊர் ஊராக சுற்றி அவனுக்கு சம்பாதிக்கவே நேரம் சரியாக இருந்து இருக்கும்.அதனால் அவள் தன் இன்பங்களையும்,தேவைகளையும் இன்னொரு நபரிடம் அனுபவிக்க,அல்லது அதற்கு அச்சாரம் இட முயல்கிறாள்.இதுதான் அந்தப்பெண்ணின் செல்போன் உரையாடலின் மையமாக இருக்கும்.


அப்பெண்ணின் குடும்பம் மிகவும் கலாச்சார,கட்டுக்கோப்பான குடும்பமாக அமைந்து இருப்பின்,அவளின் நடவடிக்கை என்றாவது ஒருநாள் அவள் குடும்பத்திற்கு தெரியவரும் நேரத்தில் கண்டிப்பாக பூகம்பம் வெடிக்கத்தான் செய்யும்.அவளது குடும்பத்தினர் அவளை கொலை செய்யும் அளவுக்குக்கூட போகலாம்…(அனுமானம் தான்… உண்மை அல்ல)
எதற்காக அப்பெண் இப்படி ஒரு சிற்றின்பத்திற்கு ஆளாகிறாள்.

என்னைப்பொறுத்தவரை அவள் கணவனின்,குழந்தைகளின் எதிர்காலம் கருதி தன் இன்பங்களுக்கு ஒரு முழுக்குப்போடலாம்.
தன் பெற்றோர்களின் மானத்தையும்,மரியாதையும் நினைத்துக்கொண்டு கொஞ்சம் அடக்கிவாசிக்கலாம்.

இல்லை தன்னால் அடக்கா முடியாமையும்,ஆசையும் இருக்கும்  பட்சத்தில் அதைப் பற்றி தன் கணவரிடமே பேசி ஒரு முடிவு கட்டலாம்.என்னால் உங்களைவிட்டு இருக்கமுடியவில்லை.என் விருப்பங்களுக்கு நீங்கள் மறுப்பு சொல்லக்கூடாது என்று சொல்லிப்பார்க்கலாம்.

கணவரிடம் கூச்சப்பட்டு அடுத்தவரிடம் தன் ஆசைகளை எதிர்பார்ப்பதை விட கணவரிடமே கேட்டுப்பெற்றுக்கொள்ளலாமே…..?கணவர் இவளது பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை எனில்,அதன் பிறகு டைவர்ஸ் போன்ற முறைகளைப் பின்பற்றி அவரிடமிருந்து விடுதலை வாங்கிவிட்டு புதிய கணவனாக, தன்  விருப்பத்திற்கேற்ற ஒரு ஆடவனை தேர்வு செய்துகொள்ளலாமே….

அதுதான் சிறந்த வழியாக இருக்கமுடியும்.அப்படியுமில்லாமல்,இப்படியுமில்லாமல் தன் விருப்பத்திற்கு மட்டுமே வாழ்வது குடும்பமாக அல்லாமல் வேறு விதமாக அல்லவா ஆகிவிடும்.

இதுவே ஒரு ஆண் பண்ணினால் சரி என்பீர்களா…?கண்டிப்பாக இல்லை…இதில் ஆண் வேறு பெண் வேறு இல்லை.இதையே அப்பெண்ணின் கணவன் பண்ணியிருந்தாலும் அவருக்கும் இந்த பதில் தான் சரியாக அமையும்.

எனக்குத்தெரிந்து அப்பெண், தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி தன்னுடைய இப்போக்கை மாற்றி,அவளது தேவையை அவளது கணவனிடம் பெற்று வாழ்ந்தால் பேப்பரில் அன்றாடம் வரும் செய்திகளுக்கு தலைப்புச்செய்தியாக ஆகாமல் சுமுகமாக வாழ்க்கையை நடத்தலாம்.

இல்லையெனில் இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ச்சியாக இன்று ப்யூட்டிபார்லரில் சந்தித்த பெண், நாளை கோவிலில் சந்திக்கும் பெண்,மார்க்கெட்டில் சந்திக்கும் பெண் என்று பெண்கள் தங்கள் உண்மையான வளர்ச்சியை இழந்து, பேப்பரில் தலைப்புச் செய்தியாகத்தான் வந்துகொண்டிருப்பார்கள்.   

Wednesday 12 June 2013

லஷ்மிகுபேரர்........!


திடிரென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினேலே என்ற பாடல் வரிகள் போல் திரு லஷ்மி குபேரர் அய்யா அவர்கள் சென்னை வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்களம் என்ற கிராமத்தில் புதிதாக உதயமாகி உள்ளார்.


குபேரன் என்பவர் வெங்கடாசலபதிக்கு கடன் கொடுத்தவர்.வெங்கடாசலபதி பெத்த பணக்காரராக இருந்தும் குபேரனிடம் கடன் வாங்கிக்கொண்டு மாதமாதம்  கடனைக்கொடுக்காமல் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு இருக்கிறார்.

பாவம் நம்ம மக்கள் எல்லாம் தனக்குக்கிடைக்கும் பணத்தில்,அல்லது லாபத்தில் அல்லது அடுத்தவரிடம் அடிச்சுப்புடுங்கியதில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு கமிஷனை கொண்டுபோய் கொடுப்பார்கள்…சாரி கொட்டுவார்கள் அங்கே இருக்கும் பெருத்த உண்டியலில்.

ஆனால் வருடந்தோறும்,மாதந்தோறும் எண்ணும் உண்டியல் பணத்தில் வரும் வருமானம் குபேரனுக்கு வட்டி செலுத்தத்தான் போதுமானதாக இருப்பதாக உளவுத்தகவல் துறை தெரிவிக்கிறது.

குபேரன் பாவம் என்ன பண்ணுவது என்று தெரியாமல் இந்தக்கால கந்துவட்டிக்காரர்கள் போல் அல்லாமல் வட்டியை மட்டும் வாங்கிக்கொண்டு,முழுப்பணத்தை அப்புறமா கொடுங்க என்று சொல்லிவிட்டார்.(காரணம் பின்வருமாறு)

சென்னையிலும் சின்ன திருப்பதி கிளை ஆரம்பித்தார்கள்.ஆனால் அங்கேயும் வருமானம் பற்றவில்லை..வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு இருந்த சூழலலில்…,தான் ஒரு திருப்புமுனையாக..படத்தில் வரும் திடிர் செகண்ட் ஹீரோயின் எண்ட்ரிபோல்……..

திருப்பதி வெங்கடாசலபதியின் மனைவி லஷ்மி ஆவார்.ஆனால் அவர்  இப்போது குபேரனுடன் இணைந்து லஷ்மிகுபேரர் என்ற பெயரில் ரத்தினமங்களம் என்ற ஊரில் வீற்றுயிருக்கிறார் சாமியாக……அதுவும் குபேரன் மடியில் உட்கார்ந்து இருப்பார்.கோவிலுக்குச் சென்றால் பார்க்கலாம் அந்த அரிய காட்சியை….

திருப்பதி வெங்கடாசலபதியின் மனைவி ஏன் குபேரனுடன் இணைந்தார்.அல்லது தன் கடனை அடைப்பதற்காக தன் மனைவியை குபேரனுடன் இணைந்து தொழில் பார்க்கச்சொல்லியிருக்கிறாரா என்பது குறித்து கேள்விகளுக்கு சாட்சாத்…..அந்த வெங்கடாசலபதியே வந்து பதில் சொன்னால் தான் தெரியும்…நான் எதுவும் சொல்லமாட்டேன்.ஏனெனில் சாமி குத்தம் ஆயிடுச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்…?

அதனால நம்ம திருப்பதி வெங்கடாசலபதி தன் கடனை அடைப்பதற்காக அனுப்பிய தன் மனைவி லஷ்மியை வைத்துக்கொண்டு இந்த குபேரர் நல்ல வியாபாரம் பார்க்கிறார்.

அதாவது வீட்டுக்குவீடு டோர் டெலிவரி கூட உண்டு.ரத்தினமங்களம் கோவிலில் பணம் கட்டிவிட்டால் போதும்,உடனே லஷ்மிகுபேரர் சாமி பக்தி முழங்க வேனில் பட்டுவேட்டு சட்டை,லஷ்மி அம்மா பட்டுப்புடவை,கூட வெள்ளிகளால் ஆன பொருட்கள் பணம் மற்றும் பழங்கள் இவற்றுடன் நம் வீடு தேடி வந்து பூஜை செய்து கொடுக்கிறார்கள்.சுவாமியை சுமந்து வரும் சுவாமி ஜீ க்கள்..

2 மணிநேரப்பூஜையில் நம் வீட்டில் இருக்கும் தங்கம்,வெள்ளி,பணம் இவற்றைக்கொண்டு லஷ்மிகுபேரரர் பூஜையில் அபிஷேகம் பண்ணி (அந்தப்பணம், நகை,வெள்ளி )எல்லாம் இன்னும் அதிகமாகப் பெருக, நமக்கு ஆசிர்வாதம் பண்ணிக்கொடுப்பார்கள்.

லஷ்மி குபேரரர் சாமிக்கு பச்சைக்கலர் தான் ராசியான கலர் சோ அவருக்கு பச்சைகலரில் தான் திருநீறு,மற்றும் பச்சைக்கலர் லட்டு,மற்றும் பச்சைகலர் கயிறு இப்படித்தான் அபிஷேகம் பண்ணிக்கொடுக்கிறார்கள்.
பச்சைக்கலரில் வலம் வருவதால் பச்சை சாமி என்றெல்லாம் சொல்லக்கூடாது…சாமிக்குத்தம் சாமிக்குத்தம்….

அதேமாதிரி லஷ்மிகுபேர கோவில்….,,அரிசி புடைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய அந்த சுளகில் பச்சைக்கலரில் ஒரு ஜாக்கெட் பிட்,பச்சைக்கலரில் ஒரு லட்டு,பச்சைக்கலரில் கயிறு மற்றும் ஒரு 5 ரூபாய் நாணயம் மற்றும் தாமரைப்பூ ஒன்று இவற்றை வைத்து 150 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

அதை நாம் வாங்கிச்சென்று அபிஷேகம் பண்ணினால் காசுகளில் ஏதோ அர்ச்சனை பண்ணி அதில் நமக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.அதை நாம் எடுத்துக்கொண்டு வந்து பீரோவில்,அல்லது பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் பணம் பெருகி நாம் அம்பானியை விட அம்பார்லாவாக ஆகிவிடுவோம் என்பது ஐதீகம்.

இதை மக்கள் நம்பி கடைபிடிக்க ஆரம்பித்து விட்டனர்.இதனால் ரத்தினமங்களம் கோவிலில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.வருமானம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.லஷ்மி குபேரர் தினம் என்று ஒரு நாள் மட்டும் கோடிக்கணக்கில் வருமானம் வந்ததாக தெருக்கோடி சாமிகள் சொன்னார்கள்.

இதுவரை பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே குடிகொண்ட குபேரர்..இந்தியத்தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக நடுத்தர குடும்பங்கள் வீட்டிற்கும் சென்று காட்சி அளிக்க இருக்கிறார்.நடுத்தரமக்களையும் காசு வாங்கி காட்சி தந்து (ஏ)மாற்ற இருக்கிறார்.

இதனால் இன்னும் அநேக மக்கள் முட்டாள் ஆவதற்கு நிறைய சான்ஸ்கள் இருக்கின்றன.என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

திருப்பதி வெங்கடாசலபதி கடனை அடைக்க முடியாததால் தன் மனைவி லஷ்மியை குபேரனுடன் நம்பி அனுப்பி தன் கடனை அடைப்பதற்காக பெரும்பாடுபடும் வெங்கடாசலபதிக்கும்,

தன் கணவனின் கடனுக்காக இன்னொரு ஆணுடன் வீடுவீடாகச்சென்றும்,கோவிலில் வீற்றிருந்தும் எல்லோரிடம் பணம் வாங்கிக் கடனை அடைத்துக்கொண்டு இருக்கும் லஷ்மிக்கும்,

இவர்களை எல்லாம் குபேரராக ஆக்கி நடுத்தர மக்களையும்,பணக்காரர்களையும்..,ஏன் ஏழைக்களையும் கூட  குபேரர் ஆக்க இருக்கும் தொப்பை குபேரருக்கும் என்ன கைமாறு செய்வது என்று தெரியாமல் முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குபேர குபேர நாமம் வாழ்க………! 

Friday 7 June 2013

ஒரு பெண் தன் எதிர்பார்ப்பை கணவரில்லாத இன்னொருவரிடன் பெற முடியுமா...?


பெண்கள் பலர் மிக சுதந்திரமாக நிம்மதியாக ஆற அமர உட்கார்ந்து தங்கள் மனநிம்மதியை பெற நினைக்கும் இரண்டே இடம் ஒன்று கோவில், இன்னொன்று அழகுநிலையமாகத்தான் இருக்கும் என்று சமீபத்திய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு அநேகம் பெண்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கிறது.

அப்படிப்பட்ட அழகுநிலையத்தில் தான் நேற்று ஒரு பெண்ணின் இங்கீத,சங்கீத,சாகித்திய பேச்சுக்களை கேட்க நேர்ந்தது.

அப்பெண் அழகுநிலையம் உள்ளே நுழைந்ததும் மிக இயல்பாக பியூட்டிபார்லர், வைத்து இருக்கும் பெண்ணிடம் பேச ஆரம்பித்தார்.குழந்தையை 2 பேரையும் அம்மா வீட்டில் விட்டுட்டு வந்து இருப்பதாகவும்,அவளது கணவர் அடிக்கடி வெளியூர்க்கு வேலையாகச்சென்றுவிடுவதாகவும்,அதனால் பாதிநாட்கள் தன் அம்மாவின் வீட்டிலேயே தங்கிவிடுவதாகவும் சொல்லிக்கொண்டு இருந்தார்.

அப்பெண் பர்தா போட்டு வந்து இருந்தார்.அவரது காலுக்கு பெடிக்குயூர் செய்து கொண்டு இருந்தார்கள்.சிறிது நேரத்தில் எனக்கு அப்பெண் யாரோட மெதுவாக பேசிக்கொண்டு இருந்தது கேட்டது.மிகவும் சன்னமான குரலில் பேசியபடியே இருந்தார்.

எனக்குத்தான் இம்மாதிரி விசயங்களில் எல்லாம் மூக்கை நுழைப்பது ஆர்வமாச்சே,உடனே காதையும்,கண்ணையும் உன்னிப்பாக்கினேன்.

அப்போது தான் தெரிந்தது,அப்பெண் தன் பர்தாவுக்குள் செல்போனை விட்டுக்கொண்டு ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தார்.நிச்சயமாக அவளது கணவன் இல்லை.ஏதோ ஒரு ஆண் நண்பர் தான் உரையாடுகிறார்.

"ம்ம்ம் சொல்லு,ஆமாம்….அவர் வருவதற்கு இரண்டுநாட்கள் ஆகும்.நான் பியூட்டிபார்லர்,மார்க்கெட்டுக்கு வந்தா தான் ஃப்ரியா பேசமுடியும்,வீட்டில் அம்மா,அப்பா எல்லாரும் கூடவே இருக்காங்க என்பது போன்ற சமிஞை மொழிகளால் பேசிக்கொண்டே போனார்."

அதனால் என்னால் அவள் கணவனிடம் பேசவில்லை என்பதை உறுதியாக கணிக்க முடிந்தது.

ஒரு அரைமணி நேரம் நான் அங்கு இருந்து இருப்பேன்.அதுவரை அப்பெண் போனை கட் பண்ணாமல் பேசிக்கொண்டு இருந்தார்.ஆனால் சந்தோஷமாக உரையாடிக்கொண்டு இருந்தார்.

அவளது கணவருக்கு தெரியாமல் உரையாடிக்கொண்டு இருக்கிறார்.அல்லது ஏதோ தவறு புரிந்து கொண்டு இருக்கிறார்.தவறான வழியில் சென்று கொண்டு இருக்கிறார் என்று என் மனம் சொன்னது.

அப்பெண்ணுக்கு அந்த X மனிதனுடன் பேசிக்கொண்டு இருப்பதில் ஒருவித சந்தோஷக்குள் தான் இருப்பதாக உணர்ந்து தான் இப்படி தனியாக தான் செல்லும் இடங்களில் அந்த ஆணுடன் பேச எத்தனிக்கிறார்.

இது இன்று சகஜமாக ஆகிவிட்டது என்றாலும்,அப்பெண்ணுக்கு இன்னொரு ஆணிடம் தன் வாழ்க்கையையும்,தன்னுடைய மனதையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் அங்கே ஏன் அவசியமாக நிற்கிறது ?.

தன் குடும்பத்தாரிடமும்,தன் கணவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டிய விசயங்களை இன்னொரு நபரிடம் பகிர்ந்து கொள்ள அவள் ஏன் முயல்கிறாள்.?

எனக்கு ஒரே கேள்வி தலையை சுத்தியது.இன்றைய காலகட்டம் இதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், யாருக்கும் தெரியாமல் போன் பேச நினைப்பவள் அவனை இதுவரை சந்திக்காமலா இருந்து இருப்பாள்.?

அவனிடம் இருந்த ஏதோ ஒன்று தனக்கு இதுவரை கிடைக்காத ஒன்று,தான் எதிர்பார்த்து ஏமாந்த ஒன்று  அவனிடம் இருப்பதாக நினைத்து தான் பழகிவருவாள்.அது கிடைக்கும் என்ற ஆவலாக இருக்கலாம்,இல்லை கிடைத்தும் இருக்கலாம்,

சாதாரண போன் மேட்டர் இதுக்கு இவ்வளவு சீரியஸ் தேவையா என்று கேட்கலாம்.ஆனால் இது சாதாரண மேட்டர் அல்ல.ஒரு பக்குவப்பட்ட ,அதுவும் மதரீதியாக பாதுக்காக்கப்பட்ட ஒரு பெண் இப்படி உரையாடிக்கொண்டு இருந்தது ஏதோ நெருடலை உண்டு பண்ணுகிறது.

இன்றைய பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்.எதற்காக ஒருசில மணித்துளி சந்தோஷத்திற்கு தன் மனதை அடுத்தவரிடன் தாரைவார்க்க நினைக்கிறார்கள் என்று யோசித்துப்பார்த்தால்,நாளைய எதிர்காலம் கேள்விகுறியைத்தான் பதிலாக நமக்கு அளிக்கும்.

போனில் பேசுவது சாதாரண விசயம் தான். அதை ஏன் சம்பந்தமில்லாத ஆட்களிடம்,அல்லது தவறாக பேச நினைக்கும் ஆட்களிடம் பகிர்ந்து கொண்டு தன் குடும்பத்தை தனக்கு எதிராக திசைதிருப்ப நினைக்க வேண்டும்.?

அப்பெண்ணின் கணவருக்கோ,அல்லது அவளது குடும்பத்திற்கோ இப்படி நம் மனைவி,மகள் அடுத்தவரிடம் தன் எண்ணங்களை பகிர்ந்துகொள்கிறாள் என்று தெரிய ஆரம்பித்தால்,அவளது வாழ்க்கை……?

தொடர்வோம்…………

Thursday 6 June 2013

பெண் முதல்வர் எடுக்கும் முடிவு.. பெண்களுக்கு எதிரான சதி...!


நேற்று மருத்துவமனையில் ஒரு வயதான பெண்மணியை சந்திக்க நேர்ந்தது.

அவங்களா பேச்சை ஆரம்பித்தாங்க..

யம்மா இந்த பொம்பள வந்தா எல்லாமே கஷ்டம் தான்மா….என்றதும்..நான் நெளிந்தேன்.

உடனே ஆமாம்மா…ஒன்னு வெயில் காய்ஞ்சு பஞ்சம் பொழைக்கமுடியாம போகும்,இல்லைன்னா வெள்ளப்பெருக்கு,புயல்னு ஊரே அழிஞ்சு போய் ரொம்ப மக்கள் அவதிப்படுவாங்க..என்றவர் எழுந்து சென்றுவிட்டார்.
அப்போது தான் யோசனையே வந்தது.

எப்போதும் ஜெ ஆட்சியில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துகொண்டே இருக்கும்.மகாமகம் கும்பாபிஷேத்தில் இருந்து ,கும்பகோண பள்ளி பிள்ளைகள் மரணத்திலிருந்து,சுனாமி வரையில் சொல்லிக்கொண்டே போகலாம்.இவரது ஆட்சியில் ஏற்படும் இன்னல்களைப் பட்டியலிட்டால் இன்னும் இன்னும் ஏராளம்.

ஆனால் ஆட்சிக்காலத்தில் ஏற்படும் இயற்கைக்கு என்ன செய்வது.?என்று கேட்பவர்களின் கவனத்திற்கு….

இதுவரை கும்பகோணப் பள்ளிக்குழந்தைகள் செத்ததற்கு என்ன செய்தார் ஜெ என்று இதுவரை ஒருவர்கூட கேள்வி கேட்டோமா…?

99 குழந்தைகளை பலிகொண்ட அந்த தீ விபத்து நடந்த ஆண்டு தோறும் மெழுகுவர்த்தி ஏந்தி அந்நாளை அனுசரிக்கிறார்கள்.அவ்வளவு தான் நடந்துள்ளது.

அந்நிகழ்ச்சிக்குபின் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அனைத்தும் அப்போதைய ஜெ அரசாலயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கும்பகோண குழந்தைகள் இறந்தபோது கல்வி நிலையங்கள் அனைத்து இனிமேல் அரசு அனுமதி பெற்ற கட்டடங்களை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படும்  என்று சொன்னதில் எதை சரி பண்ணியிருக்கிறார்..இன்னும் சென்னை மற்றும் ஊர்ப்பள்ளிகளில் எத்தனை பள்ளிகள் அனுமதி பெற்று செயல்படுகிறது…?
அல்லது பள்ளிக்கல்வித்துறையில் பெண்களுக்கான முன்னேற்ற விசயங்கள் என்ன கொண்டு வந்தார் நம் பெண் முதல்வர்….?

ஆனால் ,இன்று பெண்கள் படிக்கும் பள்ளியில் பெண் ஆசிரியைகளே நியமிக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்துவிட்டு அரியாசணத்தில் அமர்ந்து இருக்கிறார்…

அண்ணா,பெரியார் எல்லாம் கொண்டு வந்த ஆண்,பெண் சமம் என்ற உன்னதம் வேண்டும் என்று போராடி நமக்குப்பெற்றுத்தந்த பெண் சுதந்திரத்தை ஒரு பெண் ஆளும் முதல்வர் சாக்கடையில் போடப்பார்க்கிறார்.

பெண் படிக்கும் பெண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் இருந்தால் தப்பு நடக்கும் என்று தப்பாகக் கணக்குப்போட்டு அதில் பெண் பிள்ளைகளை மீண்டும் கற்கால வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல முற்படுகிறார்.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ஆண்களை ஊரைவிட்டு ஒதுக்கி வச்சால் சரியாகிவிடுமா…?அதற்கு என்ன தீர்வு…?பாலியல் வன்கொடுமை நடக்காமல் தடுக்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமோ அதை மேற்க்கொள்ளாமல் பெண் ஆசிரியைகள் மட்டும் நியமனம்…என்றால்…அந்த சங்கடம் ஆண்கள் பள்ளியில் வேலை பார்க்கும் பெண் ஆசிரியர்களுக்கு ஏற்படாதா…?என்ன முட்டாள் தனமான அரசு என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.

இன்றைய பெண்கள் எவ்வளவு ஆண்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறார்கள்.அவர்களை அடக்கப்பார்க்கிறார்.பெண்கள் அடிமைத்தனத்தை பள்ளிகளில் இருந்து தொடங்கி வைக்கப்பார்க்கிறார்.இது கண்டிப்பாக கண்டிக்க பட வேண்டியது.

இதை எதிர்க்கவில்லையெனில் நம் கண்ணுக்கு முன்னே வளர்ந்துகொண்டு இருக்கும் கல்வி கட்டணங்கள்,ஆங்கிலவழிக்கல்வி,சமச்சீர் கல்வியை அழிக்கபார்த்தல் என்பது போன்றே ஆண் தனி ,பெண் தனி என்ற பாகுபாட்டையும் வளர்த்துக்கொண்டு வருவார்கள் போல..

குழந்தைகளுக்கும்,பள்ளிகளுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கி,அவர்கள் வசதியான சூழலிலும்,அழுத்தம் இல்லாத படிப்பினாலும் வெற்றிக்காண ஒரு முதல்வர் நினைத்தால் தான்.ஒரு பெண் முதல்வர் ஆட்சி வெற்றிகரமாக நடக்கும் இல்லையெனில்,
கல்விக்கெதிராக ஜெ நடத்தும் அரசாட்சியை கண்டு வருடந்தோறும் மெழுகு உருகுவதைபோல்….கல்வியும் உருகிக்கொண்டு இருப்பதைத்தான் கருகிப்போன குழந்தைகளின் மவுனயித்த பார்வையைப்போல நமது பார்வையும் கேள்வியறிவில்லாமல் நட்டுக்கொண்டு இருக்கும்…..

Monday 3 June 2013

கண்ணகி காவியத்தில் மட்டுமே கற்புக்கரசி....!



ஆம்,என்பர் முப்பால் உணர்ந்தவர்கள்..இலக்கியவாதிகளுக்கு கண்ணகி ஒரு கவிதை.ஏன் கலைஞரே கூட கண்ணகிக்கு சிலை வைத்து,அவருக்குச் சிறப்பு செய்தாரே….?இப்படி ஒரு பெண் வாழ்ந்தாள்,காவியத்தில் இடம் பெற்றாள்,என்பதெல்லாம் நியாயம் தான்.

அதற்காக சிலை எடுப்பதும்,கோவில் கட்டுவதும்,கண்ணகி தான் நாட்டில் கற்புக்குப்பேர் போன கரசி என்று சொல்வதெல்லாம்..ஏற்றுக்கொள்ள  என் மனம் மறுக்கிறது.

மண் மகள் காலடி படேள்…என்று கண்ணகி தன் திருபாதக்கமலம் கூட நிலத்தில் பதியாதவாறு வளர்க்கப்பட்டாளாம்.

ஏன் அப்படி ஒரு குழந்தைதனமாக ஒரு பெண்ணை அவர்களது பெற்றோர்கள் வளர்த்தார்கள்?.முதல் கேள்வியே பெற்றோர்களைத்தான் கேட்கவேண்டும்,அல்லது சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளை கேட்க வேண்டும்.

செல்லமாக மகளை வளர்த்த பெற்றோர்களுக்கு,கண்ணகியை அறிவுப்பூர்வமாக வளர்க்க முடியவில்லையே ஏன்…?அப்பெண் தன் அம்மா,அப்பா கோண்டாக இருந்துவிட்டு பின்னர்,தன் கணவரின் கோண்டாக மாறியதால் வந்த வினை தான்,இந்த காவியம்..இந்த காவியம் கிடைப்பதற்காக ஒரு பெண் முட்டாள் ஆகியிருக்கிறாள் என்று கோபமாக வருகிறது.

அல்லது இளங்கோவடிகள் தன் கதைக்கு இப்படித்தான் நாயகி அமைய வேண்டும் என்பதற்காக திரித்து கண்ணகியை இன்னோஸண்டாக கதையில் காட்சிப்பொருளாக அமைக்கப்பட்டாளா….?இந்தக்கேள்விக்கு எல்லாம் நம்மிடம் பதில் இல்லை.

இந்தக்காலத்தில் இளங்கோவடிகள் இருந்து இருந்தால் நான் அவரை என் கேள்விக்கணைகளால் ஒருபிடி பிடித்து இருப்பேன்.

தன் கணவரின் தேவைகள் அனைத்தையும் செய்த ஒரு பெண்,தன் கணவர் இன்னொருவளுடன் சென்றபின் நேராக வீடு தேடிச்சென்று,கணவரை உதைத்து,அப்பெண்ணையும் உதைத்து இழுத்துவரச்செய்து இருக்கலாம் என்று சொல்லலாம்,கேட்கலாம்,ஆனால் நான் அதைக்கேட்கப்போவது இல்லை.

கோவலன் தன் காதலினால்,கசிந்துருகி இன்னொரு பெண்ணிடம் மயங்கிக்கிடக்கும் போது,கண்ணகியிடம் அந்த தேடல்,பொருள் கிடைக்கவில்லை என்று தானே அர்த்தம்.அவள் தன் கணவருக்கு வெட்கத்தினாலோ,நாணத்தினாலோ ஒரு இச்சையை சரிவரக்கொடுக்காமல் தான் அடுத்தவளிடம்,மாதவியிடம் தன் கணவரை தாரை வார்த்துக்கொடுத்துவிட்டாள் என்பது என் கணக்கு.
கணக்கு எல்லா நேரங்களிலும் சரிவர அமையாது.ஆனால் இதுவும் சரியான விடையாக வைத்துக்கொள்ளலாம்.

சரி,கோவலன் அங்கே மயங்கிக்கிடக்கும் போது,ஒன்று கண்ணகி தன் சொத்துகளை பார்த்துக்கொண்டு தன் வீட்டு கணக்கு வழக்குகளை கவனித்துக்கொண்டு இருந்தால்,இந்தமாதிரி அவன் திரும்பி,திருந்தி வரும் போது கஷ்டப்பட்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று அவசரகால முடிவை எடுத்து இருக்கத்தேவையில்லை.

இரண்டு மாதவி எவ்வளவு கிளவராக தன் காதலனை கைக்குள் போட்டுக்கொண்டு,தன் அம்மாவையும் கேள்வி கேட்காமல்,காதல் பரத்தையால் மயங்கிபோய் கோவலைனை கட்டி அணைப்பதிலேயே…கூர்மையாக இருந்து இருக்கிறாள்.அந்த தகுதியாவது இப்பெண் கண்ணகியிடம் இல்லை என்பது எனக்கு கோபம்,அவள் தன் வேலையாட்களை அனுப்பி பணம் ,நகை வாங்கிவரச்சொன்னால்,இவளும் தன் கணவனின் சேம நலம் விசாரித்துவிட்டு எல்லாப்பொருட்களை அள்ளிக்கொடுத்துவிட்டு,கடைசியில் உடல் சுகமும் போய்,உள்ள சுகமும் காலியாகி நிர்கதியாகி நின்றாள்.

ஏன் அவளுக்கு சமயோசித புத்தி இல்லாமல் போனது,அல்லது அவ்வாறு காட்சி எழுதப்படவில்லையா…?

பெண் என்பளவள்,புத்திசாலியாக மட்டும் அல்ல சமயோசித புத்தி கொண்டவளாக அமைய வேண்டும்,அவள் தான் வாழ்வில் வெற்றி கொள்வாள்.கண்ணகியோ மிகுந்த 

பழைமைவாதியாகவும்,பொறுப்பில்லாதவளாகவும்,அன்புக்கு மட்டும் கட்டுப்பட்டவளாகவும் அங்கே காட்டப்படுகிறாள்.

பின்னர் தன் கணவர் கொலையுண்டதும்,கோபம் வெறி இவையெல்லாம் தலைக்கேறி..அரசை சந்தித்து வீர ஆவேசமாக பேசி,மதுரையை எரிக்கத் தோன்றிய துணிவு கதையின் ஆரம்பத்திலேயே இருந்து இருந்தால்..காவியத்தில் கண்ணகி முட்டாள் ஆகியிருக்கமாட்டாள்.நமக்கு கண்ணகி மட்டுமே பத்தினி அல்ல எத்தனையோ அறிவுள்ள,புத்திசாலியான,கணவனை கைக்குள் போட்டுக்கொள்ளும்,சமயோசித புத்திகொண்ட பத்தினிகள் இருக்கிறார்கள்..என்பதும் தெரிந்து இருக்கும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் இது எதிர்ப்புக்காக எழுதப்பட்டது அல்ல,கண்ணகியை இப்படிக்காட்டி இன்னும் பெண்களுக்கு கண்ணகி என்றாள் கற்புக்கு அரசி ,இப்படித்தான் குழந்தைதனமாக இருந்தால் கணவர்கள் எல்லாம் தப்பு செய்துவிட்டு வந்தால் மனைவிகள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டுக்கோப்புகள் வைத்து பெண்களை ஒரு போர்வைக்குள் திணிக்காமல் இருந்து இருப்பார்கள்.

தன் கற்பை காப்பாற்றிக்கொள்ள தன் திறமைகளையும்,தன்னம்பிக்கையும்,தன்னார்வத்தையும் வளர்த்துக்கொண்டு வாழும் ஒரு பெண் தான் என் கண்முன் தோன்றும் உண்மையான கண்ணகியாக நிலைத்து இருப்பாள்.அவளுக்கு சிலை முக்கியம் அல்ல…கற்சிலையாக நிலைத்து இருப்பதைவிட உயிருழுள்ள வாழும் வாழ்க்கையை சிலையாகவும்,ஒரு சிற்பியாகவும் இருந்து தன் குடும்பத்தையும் தன்னையும் படைத்துக்கொள்வார்கள் இன்றைய திறமைமிக்க கண்ணகி(கள்)……..