Thursday 25 April 2013

”தற்”கொலை....?


இரவு நேரம் டீக் கடையில் நின்று கொண்டு இருந்த நட்பு வட்டங்கள்.அதில் ஒருவன் தன் வீட்டுக்கு செல்வதற்கே தனக்கு பிடிக்கவில்லை என்று தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.ஏண்டா அப்படியெல்லாம் சொல்ற..?போடா என்று சமாதானப்படுத்தி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் நண்பர்கள்.

மறுநாள் காலையில் அந்த நண்பன் தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிக்கொண்டதாக தகவல் வந்தது..என்ன காரணம்?ஏன் தற்கொலை பண்ணிக்கொண்டான்.என்று யாருக்கும் புரியாமல் விழித்து இருந்தார்கள்.
ஆஸ்பிட்டல் வாசலில்.., அவனது மனைவி மட்டும் அழவும் முடியாமல்,அழாமல் இருக்கவும் முடியாமல் பேந்தப் பேந்த விழித்தபடி உட்கார்ந்து இருந்தாள்.

நண்பர்கள் அவளிடம் ஆறுதல் கூறச் சென்ற போது அழுவது போல் பாசாங்கு செய்தாள்.நண்பர்களுக்கு சந்தேகம்.அன்யோன்யமாக வாழ்ந்த தம்பதிகள் தானே இவர்கள்.ஏன் கணவன் இறந்த துக்கம் இவளை அதிகமாக பாதிக்கவில்லை.ஒரு வேளை அதிர்ச்சியில் இப்படி இருக்கிறாளோ என்று நினைந்து பின் அதை மறந்து.நண்பனின், இறுதிச் சடங்கு முடியும் வரை கூட இருந்து விட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.

மறுநாள் மாலை வந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வாங்குவதற்காக இறந்த நண்பனின் நண்பன் போலீஸ் நிலையம் சென்றான். பேயரைந்தது போல் திரும்ப வந்து தங்கள் நட்பு குழுவிடனரிடம் தெரிவித்த செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

அடுத்த நாள் காலை போலீஸ் சந்தேகத்தின் பேரில் இறந்தவனின் மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டது.

எல்லோருக்கும் அதிர்ச்சி எப்படி இப்படி அன்யோன்யமாக வாழ்ந்த தம்பதிகளில் கணவரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டிய காரணம் எது..? மனைவிக்கு ஏற்பட்ட வெறுப்பு தான் என்ன..?என்று துருவித்துருவி ஆராயப்பட்டது.

மறுநாள் காலை செய்தித்தாளில் ”கணவனைக்கொன்ற மனைவி கைது”என்று இரண்டாவது பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது.
காரணத்தை தெரிந்துகொள்ள ஆவலுடன் பேப்பரை படித்தனர் நண்பர்கள்.கைதான மனைவியின் பேட்டியாக வந்ததை படித்த போது அவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஷாக்..

இதற்காகவா என் நண்பனைக்கொன்றாய் என்று கோபத்தோடு காவல் நிலையம் நோக்கிச் சென்றனர் நண்பர்கள்.
ஆனால் அங்கே அவள் இல்லை.ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தாள்.நல்லவேளையாக அவள் அங்கே இருந்து இருந்தால் நண்பர்கள் பட்டாளம் இணைந்து அவளை கொன்று இருந்தாலும் இருக்கும்..

இனி அவளுக்கான கடுமையான தண்டனை கிடைக்க போராட வேண்டும் என்ற நம்பிக்கையோடும் ,வெறியோடும் நண்பர்கள் அனைவரும் தன் இறந்த நண்பனின் நினைவுகளை சுமந்தபடி கண்ணீர் மல்க அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.

இந்தக் கதையில் அவள் எதற்காக தன் கணவனை கொலை செய்தாள்..?கணவன் ஏன் தனக்கு வீட்டிற்குச் செல்வதற்கே பிடிக்கவில்லை என்று தான் கொலை ஆகும் முன் தன் நண்பர்களிடம் சொல்கிறான்..?என்பதை நீங்களே கண்டுபிடித்து எழுதுங்கள்..

No comments:

Post a Comment