Saturday 13 April 2013


மலாலா ஒரு அறிவுச்சித்திரம்:

ஒருசிலருக்குத்தான் சின்ன வயதில் தான் வளரும் போதே தன்னுடன் போராட்ட குணத்தையும் சேர்த்தே வளர்த்துக்கொள்ள முயல்வர்.அப்படிப்பட்டவள் தான் மலாலா என்ற சிறுமி.பெண்கள் கல்விக்காக போராடத்தொடங்கிய மலாலா ஸ்கூல் படிக்கும் மாணவி.பாகிஸ்தானில் தாலிபான் அமைப்புகள் சில பெண்கல்வியை தடுத்தனர்.
இதனை எதிர்த்து போராடிய மலாலா.2009 ம் ஆண்டு அந்நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி வாழ்க்கை முறை மற்றும் தலிபான்களின் அடக்குமுறை பற்றி உருது மொழியில் பி பி சி இணையதளத்தில்,கட்டுரையாக எழுதினாள்.அதுவும் புனைப்பெயரில் அவள் எழுதிய கட்டுரை பிரபலமடைந்தைத் தொடர்ந்து தங்களைப்பற்றி உலகம் அறியச்செய்துவிட்டாள் என்ற கோபத்தில் சிறுமியை அடையாளம் கண்டுகொண்ட தாலிபான் அமைப்பு அவளை தலையில் சுட்டது.
2012 ஆண்டு மலாலா சுடப்பட்ட செய்தி அவள் வீட்டை மட்டுமல்ல உலகையே உலுக்கியது.தான் படிக்க வேண்டும் என்ற ஆசையில் பெண் குழந்தைகளின் படிப்பைத்தடுக்கும் உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது என்று கேட்டதற்காக சிறுமி என்றும் பாராமல் அவளை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல நினைத்ததை உலக நாடுகள் அனைத்தும் எதிர்க்க ஆரம்பித்தன.படுகாயமடைந்த மலாலாவை பிரிட்டன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வைத்தனர். எல்லோரும் அவள் மேல் வைத்த நன் நம்பிக்கையின் பெயரால் அவள் பூரண குணமடைந்தாள்.
ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இரண்டு ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டது.இரண்டே நாட்களில் தொலைகாட்சியின் வழியாக பேசமுடியாமல் தான் சுகமாக இருப்பதாக அறிவித்த பின்னரே மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இங்கிலாந்து பிரிட்டன் மருத்துவமனையில் அவளை நல்முறையில் கவனித்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி சொல்லி கையாட்டி விட்டு திரும்பி மலாலா, பின்னர் பிரிட்டனில் உள்ள பள்ளியிலேயே சேர்ந்து படிக்கவும் வைக்கப்பட்டாள்.அவள் போராடி,உயிர் போகும் தருவாயில் மீண்டு வந்த கதையை புத்தகமாக எழுத முன்வந்து இருக்கிறாள்.அவளை அதற்கான முயற்சியில் தயார்படுத்த “வீடன்பெல்ட் அண்ட் நிக்கல்டன்” என்ற நிறுவனம் முன்வந்துள்ளது.இதற்காக அவளுக்காக ஊதியமாக 16 கோடி ரூபாயை கொடுத்து ”நான் மலாலா” அதாவது மலாலாவின் வாழ்க்கை குறிப்பு அடங்கிய புத்தகத்தை எழுத இருக்கிறாள் என்று அறிவித்துள்ளது.நல்ல விசயம்..இப்புத்தகம் பிரிட்டனின் மற்றொரு பதிப்பகமான லிட்டில் புரவுன் மூலம் உலகமெங்கும் வெளியிடப்படுமாம்..
ஆனால் தாலிபான் அமைப்புகளின் சில அமைப்புகள் நாங்கள் ஏன் பெண் கல்வியை எதிர்த்தோம் என்பதற்கு உதாரணம் பல கொடுத்துள்ளனர்.அதாவது அமெரிக்காவின் கையாளாக செயல்பட்டு வரும் சீர்கேடுகளை உருவாக்கும் மேற்கத்திய அந்நிய கல்வி நிறுவனங்களை . மூடுமாறு நாங்கள் உத்தரவிட்டோம்.ஏராளமான  கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
 உடனே தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா நிறுவனம் தங்கள் தொலைக்காட்சிகள் வழியாக மக்களுக்கு தவறான,அவதூறுகளை பரப்பிவிட்டனர்.தாலிபான்கள் பெண்கல்விக்கு எதிராக தாலிபான் செயல்படுகின்றனர் என்று மக்களை தூண்டி விட ஆரம்பித்தனர். சகார கல்விமுறை இஸ்லாமிய நாடுகளில் பெரும் சதித்திட்டத்துடன் திணிக்கப்பட்டதால் படித்த திருடர்களையும்.விபசாரத்தையும் குடும்ப ஆண் பெண் உறவுகளையும் சீரழிவுகளையும் உண்டாக்கியதால் தான் நாங்கள் அந்தக்கல்விமுறையை எதிர்த்தோம்.
பெண் சீரழிவுகளை கண்முன் கண்டததால் தான் தலிபான்கள் சிலர் இந்த முடிவை எதிர்த்தனர்.இதனால் அமெரிக்கா எங்கள் நாட்டில் புகுந்து எங்களை குரல்வளையை நெரிப்பது,போன்று உணர்ந்தோம்.அதன் தாக்கம் தான் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்தது.உண்மை உணர்ந்த சிலர் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.அந்நிய கல்விமுறைக்கு எதிராக செயல்பட்டனர். அக்டோபர் மாதம் 2001 ல் தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக பாகிஸ்தான் எல்லையோரத்தில் உள்ள மாகாணத்தில் குடிபுக ஆரம்பித்தனர்.
நாங்கள் பழங்குடி இனத்தவர் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்து செயல்பட மாட்டோம்.அதனால் தான் துப்பாக்கியை கையிலெடுத்தோம்.அமெரிக்கா அதிர்ந்தது.உடனே பாகிஸ்தானை தன் கைக்குள் வைத்துக்கொண்டு எங்களுக்கெதிராக இராணுவத்தை தூண்டி வேடிக்கை பார்த்தது.இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் இறந்து உள்ளனர்.ஆனாலும் அந்நிய கல்வி நிறுவனத்தை அமெரிக்க ,பிரிட்டன் உதவியுடன் பல கல்வி நிறுவனங்களை செயல்படுத்தி வந்தனர்.
மலாலாவின் தந்தை இவரும் எங்களைப்போன்ற போராளி குணமுடையவர் தான். இருந்தும் அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்பட ஆரம்பித்து விட்டார்.நாசக்கார கல்வி நிறுவனத்தை மலாலாவும் அவளது தந்தையும் ஆதரித்து பி பிசி போன்ற அமெரிக்காவின் கையகட்டு நகலில் எழுத ஆரம்பித்தனர்..பேச்சாற்றல் மிகுந்த மலாலை பயன்படுத்தி தாலிபான்களுக்கு எதிராக நடக்கும் படி உத்தரவிட்டது அமெரிக்கா கூலிப்படை.
அன்று அடையாளம் தெரியாத கூலிப்படைகளால் மலாலா சுடப்பட்டாள்.பின்னர் தாலிபான் அமைப்பு அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டது.மீட்டு வந்த மலாலா இது பற்றி எல்லாம் உண்மைத்தகவலை தெரிவிப்பாள் என்ற நம்பிக்கையோடு,அவளது கல்விக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது பிரிட்டன்.
ஆப்கான் அதிபர் அக்டோபர் 9 மலாலா தினம் என்று அறிவித்துள்ளார்.பெண் போராளி என்ற பட்டங்களும்,பதக்கங்களும் பரிசுகளும் வந்து மலாலாவை நோக்கி குவிகின்றன.இவையெல்லாம் அமெரிக்கா ஆப்கான் பாகிஸ்தான் போன்ற நாடுகளை குறிவைத்து தாக்கும் செயல் என்றே தாலிபான்கள் அறிவிக்கிறார்கள்.
எப்படியோ…கல்விக்காக ஒரு இளம்பெண் போராடுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.அமெரிக்காவின் தலையீடு இருந்தாலும் தாலிபான்கள் அடக்குமுறையை கையாள்வதும்,அடங்கவில்லையெனில் துப்பாக்கியை கையிலெடுப்பதும் என்ன வகையான செயல்?அதுக்கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அமெரிக்கா சாதுர்யமாக நுழைந்து தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள நினைக்கும் போது இவர்கள் கையில் துப்பாக்கியை எடுத்து போராட்டம் பண்ணுவது நியாயமற்றது.அதுவும் நாசவேலைகளை எல்லாம் தெரிந்துகொள்ளும் வயது அப்பெண்ணிடம் இல்லை.அவளுக்குத்தேவை படிப்பு ஒன்றுதான் அதற்காக ஒரு பெண் பிள்ளையை சுட்டு கொன்று தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள நினைப்பது காட்டுமிராண்டி செயல்தான்.இதை எந்த தாலிபான் அமைப்புகள் செய்து இருந்தாலும் சரி கண்டனத்துக்குட்பட்டவர்கள்.
அக்குழந்தை படிக்கட்டும்,அதை இப்போதே பெரியாளாக்கி அவளது படிப்பில் மண்ணை அள்ளிப்போட வேண்டாம் மலாலா மீண்டு வந்தவள் சாதிக்கப்பிறந்தவள் கண்டிப்பாக அவளை பணத்தாசை காட்டி படிப்பை முற்றுப்பெற வைத்துவிட வேண்டாம்..என்ற வேண்டுதலோடும் மலாலாவின் தலையில் பட்ட குண்டடி அவளை மேலும் இரும்புப்பெண்மணியாக வாழ வைக்கும் என்ற நம்பிக்கையோடு…மலாலாவின் நாளைய எதிர்காலத்தை வரவேற்க நாடே தயாராகி இருக்கிறது…….

No comments:

Post a Comment