Friday 19 April 2013

80 களில் காதல்............


மயங்கினேன்.. சொல்லத்தயங்கினேன்…உன்னை விரும்பினேன் உயிரே….’
தீபா ,காலேஜ் முடித்துவரும் போது தினமும் இப்படித்தான் ஏதாவது காதல் பாட்டு போடுவான் மணி.
மணி தீபாவின் வீட்டிற்கு அருகில் கேசட் கடை வைத்திருக்கிறான்.
தன் காதலை சொல்லத்துணிவில்லாமல்,பாடல்வரிகளிலே அவனது காதலை வெளிப்படுத்த நினைப்பது தான் அவன் எண்ணம்.
அந்த எண்ணம் பற்றி தெரிந்து கொள்ள தீபாவிற்கு ஒருவருடம் ஆனது.ஒருநாள் அவன் கடைக்குச் சென்று, “இளையராஜா பாடிய பாடல்களாக எனக்கு பதிந்து தரமுடியுமா?இந்த பேப்பரில் எல்லா பாடல்களும் வரிசைப்படுத்தி எழுது இருக்கிறேன்” என்று பேப்பரை நீட்டினாள்.
மணி அந்த பேப்பரை வாங்கும் போது அவன் கை நடுங்கியதை. கவனித்தாள் தீபா..
“எப்போ வரட்டும்” எனக் கேட்டாள்.
“நாளைக்கே கொடுத்துடுறேன்ங்க….”முகத்தை பார்க்காமலே திரும்பியபடி சொன்னான் மணி.
மறுநாள்,இவள் காலேஜ் முடித்து வந்தபோது,வாசலில் நின்று, “நீங்க பதியச்சொன்ன பாடல்..இந்த கேசட்டில் இருக்கு.இந்தாங்க” என்றான்.
“எவ்வளவு ஆச்சு ..?”
“இல்ல பணம் வேண்டாம்..உங்களுக்கு கிஃப்ட். நீங்க வீட்டில் போய் கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க” என உள்ளே ஓடிவிட்டான் மணி.
தீபா அவளது அறைக்குள் சென்று பாடல்களை சரிபார்த்தாள்…ஐந்து பாடல்கள் முடிந்து இருக்கும்.”தீபா.உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்”என்றது கேசட்..அதில் மணியின் குரல்.
சிரித்தபடி கேட்ட தீபா…மறுநாள் காலேஜ் போகும் வழியில் மணி கடையை பார்த்தாள் திறக்கவில்லை.
சாயந்தரமும் பூட்டியபடியே இருந்தது கடை.. ஒருவாரம் கழித்து பார்த்தபோது கடை திறந்து இருந்தது.உள்ளே சென்றாள் தீபா.
மணி எழுந்து நின்றான். அப்போது நிமிர்ந்து தீபாவை பார்க்கவில்லை.
“ஏன் கடை ஒருவாரமாக மூடியிருந்தது?” எனக்கேட்டாள் தீபா
“எனக்கு பயமா இருந்தது..”என்றான்
“என்ன பயம்?”
“இல்ல நான் கேசட்டில் பேசியதை உங்க அண்ணனிடம் நீ சொல்லிட்டா,அவர் வந்து என்ன பண்ணுவாரோ என்ற பயத்தில் தான் கடையை மூடி வைத்து இருந்தேன்” என்றான்.
“அப்போ நான் காதலுக்கு ஓகே சொல்லுவனா?இல்லையானு நீ பயப்படலை” என்றாள்.
அப்போது தான் நிமிர்ந்து பார்த்தான்..
தீபா சிரித்துக்கொண்டே, “பாட்டெல்லாம் அருமையா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அண்ணனுக்கு பயந்து கடையை பூட்டியவன்……கல்யாணத்திற்கு பயந்து காதலையும் பூட்டினால்…….?
பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன.
தீபா அவசரமாக சமையல் முடித்துவிட்டு,கணவரின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“நியூஸ் பார்த்தது போதும் சுந்தர் ப்ளீஸ் மீயூசிக் சேனல் போடுங்க கொஞ்சம்” என்றாள் தீபா.
“கொஞ்சம் என்ன.. நிறையவே போடுறேன்..” -சேனலை மாற்றினான் சுந்தர்.
“நீங்க விரும்பி கேட்கும் பாடல்..இதோ உங்களுக்காக…”.என்றபடி கொஞ்சி அந்த பெண் மறைந்தாள்….பாடல்கள் தொடங்கியது..
‘மயங்கினேன்…சொல்லத்தயங்கினேன் …..’என்றபடி விஜயகாந்தும்,ராதிகாவும் திரையில் தோன்றினர்.
அலுத்துக்கொண்ட சுந்தர், “உனக்கு இளையராஜா பாட்டுல என்ன தான் இருக்கோ… நீயே பார்த்திக்கிட்டு இரு. நான் போன் பேசிட்டு வர்றேன்” என்று நகர்ந்தான்.
தீபாவினால் இன்றுவரை மறக்கமுடியவில்லை……இளையராஜா இசையையும்,அந்த இசையை மனதில் பதிய வைத்த மணியையும்.…

2 comments:

  1. தீபாவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது...
    மணியை நினைத்தால் பாவமாக இருக்கிறது ...

    ReplyDelete
  2. ovvoru oorilum deepa mania pola jeevangal ullanar

    ReplyDelete