Tuesday 23 April 2013

குடும்ப உறவுகள்



ஒரு ஊரில் ஒரு வயதானவர் இருந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள்,இரண்டு மகள்கள்.மனைவி சமீபத்தில் தான் இறந்தார்.சொந்த வீடு இல்லை.எல்லோரையும் கட்டிக்கொடுத்ததில் எல்லா சொத்தையும் விற்றாகிவிட்டது.இன்று வெறும் ஆள் அந்த மனிதர்<P>.
அவரது வாழ்க்கையில் செய்த ஒரே ஒரு தப்பு தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல்,எல்லாம் பிள்ளைகளுக்கு,பிள்ளைகளுக்கு என செய்தது தான்.<P>
மனைவியிடமிருந்த கொஞ்சநஞ்ச நகையும் விற்று மனைவியின் டிரீட்மெண்டுக்கு செலவளித்தாகிவிட்டது.இன்று மனைவியும் இல்லை.கையில் காசும் இல்லை.<P>
முதல் பையன் என்ஜினியர்.அவரது மனைவி டீச்சர்.இரண்டு பெண் குழந்தைகள்.அங்கே சென்று தங்கினார்.ஒருவாரம் தான் இருக்கும்.மருமகள் பெட்ரூமில் பேசுவது ஹாலில் படுத்து இருக்கும் இவருக்கு நன்றாகக் கேட்டது.<p>
நமக்கு என்ன சொத்து எழுதி வச்சார் உங்க அப்பா.இப்போ வந்து உட்கார்ந்து சோறு சாப்பிடுகிறாரே வெட்கமாயில்லை.இதெல்லாம் ஒரு பொழப்பு.நானும் தான் இந்த வீட்டில் சம்பாதிக்கிறேன்.எனக்கு எல்லா உரிமையும் உண்டு.உங்கப்பா இந்த வீட்டில் தங்கினா,எல்லா வேலையும் செய்து சாப்பிடட்டும்.இல்லைனா இவருக்கு எல்லாம் நான் வடிச்சு கொட்டிட்டு இருக்க முடியாது.நான் வேலைக்குப்போறதா..?இல்ல உங்க அப்பாவுக்கு பணிவிடை செய்துட்டு இருக்கிறதா?இம்பாஸிபில்..என்னால முடியாது.<P>
தன் மூத்த பையனின் சத்தமே கேட்கவில்லை.என்ன பண்ணுவது அவனுக்கு அவன் அப்பாவால் ஒன்றும் ஆகப்போவது இல்லை.சொத்து இருந்தாலாவது மனைவியின் காலில் விழுந்து கெஞ்சியாவது கேட்டு இருப்பான்.சொத்தும் இல்லை..அதனால் சொந்தமும் இல்லை என கிளம்பிவிட்டார் தன் இரண்டாவது மகன் வீட்டிற்கு.<P>
இரண்டாவது மகன் வீட்டிற்கு செல்லும் போதே சின்ன யோசனை.இவனும் தன் அண்ணனை போல நடந்து கொள்வானோ என்று, வேறு வழி இல்லாததால், போக இடமுமில்லாததால் சின்ன மகன் வீட்டிற்குச் சென்றார்.<P>
அவனும் உள்ளூர் தான்.அங்கே சென்று வீட்டுக்கதவைத் தட்டியதும்.சின்ன மருமகள் தான் கதவைத்திறந்தாள்.”வாங்க மாமா”என்ற மகிழ்ச்சியான வரவேற்பை பார்த்து மனம் மகிழ்ந்தார்.<P>
இரண்டாவது மகன் அவ்வளவாக படிக்கவில்லை.அவனுக்கு படிப்பும் ஏறவில்லை.அதனால் சுமாரான வேலை.மாதவருமானம் ரொம்பக்குறைவு.அதனால் மிகச்சிறிய வீட்டில் இருந்தார்கள். எல்லோரும் ஒரே ஹாலில் ஒன்றாகத்தான் படுக்க வேண்டும்.<P>
இரண்டு ஆண்குழந்தைகளுக்கு நடுவில் நான் படுத்துக்கொண்டு இருந்தேன்.கொஞ்ச இடம் விட்டு மகனும் மருமகளும் படுத்துக்கொள்வார்கள்.இரண்டு நாட்கள் ஓடியது.மூன்றாம் நாள் மருமகளின் முகம் மாறுபட்டது.கவனித்தார் நான்காம் நாள் சென்றுவிடலாம் என நினைத்தார் எங்கே செல்வது என்ற யோசனையில் ஐந்தாம் நாளும் வந்தது.சாப்பிடும் போது மகன் மெதுவாக ஆரம்பித்தான்”என்னப்பா.அண்ணன் வீட்டுக்கு எப்போ கிளம்புறீங்க” என்று.<P>
நாளைக்கு சென்றுவிடுவேன்,பசங்கள பார்க்கனும் என்றுதான் வந்தேன்.இப்போ சாப்பிட்டதும் கிளம்பிடுவேன் என்று கூறிவிட்டு கண்களில் நீர் கோர்த்ததை மறைத்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.<P>
மறுநாள் விடியக்காலை மருமகளிடம் ”மகனிடம் சொல்லிவிடு.. நான் கிளம்புகிறேன் ,பிள்ளைகளை பார்த்துக்கோம்மா..என சொல்லிவிட்டு கிளம்பினார் பெரியவர்.<P>
பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டு இருந்தார்.கையில் இருந்த காசுக்கு தன் இளையமகள் வீடு இருக்கும் ஊருக்கு தான் செல்லமுடியும் பஸ் ஏறினார்.<P>
மகள் ஆசையாக ”அப்பா”என்று ஆசையாக கூப்பிட்டு நன்றாக பேசி,நன்றாக சாப்பாடு கொடுத்து வரவேற்றாள்.மருமகனும் நன்றாகப்பேசினார்.இரண்டுநாட்கள் போனதே தெரியவில்லை.மூன்றாம் நாள் எழும் போதே மாப்பிள்ளையோட அம்மா,அப்பா,தங்கை எல்லாம் வந்துவிட்டனர்.வந்ததற்கான காரணமே நீங்க வந்து பொண்ணு வீட்டுல தங்கி இருக்கீங்க.நாங்க பையனை பெத்தவங்க நாங்க வந்து அனுபவிக்காம இருப்போமா?என சம்பந்தி சொல்லும் போதே வெளியேற்றப்பட்டுவிட்டேன் நான்.<P>
கடைசியாக நம்பிக்கை இல்லாமல் முதல் பொண்ணை சந்திக்கப்போனேன்.போனவுடனே என் மகள் கேட்டது ”என்னப்பா இது, பிள்ளைகளுக்கு கூட ஒன்னும் வாங்காம கையை வீசிட்டு வர்றீங்க.என் கணவர் என்ன நினைப்பார்.அதும் என் மாமியார் வேற கூடவே இருக்கார்”என்றாள்<P>
முகம் வாடியது கண்டு,” சரிப்பா…இரண்டுநாள் தங்கிட்டு தான் போகனும்” என்றாள்.<P>
”இல்லைமா, நான் குழந்தையையும், மாப்பிள்ளை, உன்னை பார்த்துட்டு போகலாம் என்று தான் வந்தேன்.இன்றே கிளம்பனும் என்று சொல்லி ஒருநேர சாப்பாட்டை முடித்துக்கொண்டு கிளம்பினேன்…<P>
போகும் வழியும் தெரியல….போகும் காலமும் வரல…என நினைத்துக்கொண்டே ரோட்டைக்கடந்த போது தான் அது நிகழ்ந்தது.பஸ் வேகமாக வந்தது நகர்வதற்குள்….எல்லாம் முடிந்துவிட்டது.<P>
என்னைச்சுற்றி சொந்தங்களும்,பந்தங்களும்.<P>
என் மருமகள்கள் என் தலைமாட்டில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார்கள்.என் மகள்கள் என் காலைக்கட்டிக்கொண்டு அழுது கொண்டு இருந்தார்கள்.என் மகன்கள் சோகமாக நின்று கொண்டு இருந்தார்கள்.<P>
எல்லோர் கண்களிலும் கண்ணீர்.<P>
என் பேத்தி என் மகனிடம்  “ஏம்பா அழறீங்க”என்றாள்.<P>
”தாத்தா நம்மளை எல்லாம் விட்டுபோய்ட்டாரும்மா…”என்றான் என் மகன்.<P>
”அதான் தாத்தா இரண்டு நாளைக்கு முன்னாடியே நம்மள விட்டுப்போய்ட்டாங்களே..அப்போ அழாம,இப்போ அழறீங்க”என்றாள்.<P>
பெரியவர் பிணம் லேசாக சிரிப்பது போல் பிரமை எல்லோருக்கும்.<P>

1 comment: