என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிறாய்…..??
காலையில் கணவன் கேட்ட கேள்வி மனைவிக்கு ஒருமாதிரியாக இருந்தது.என்ன
சொல்வது என்று புரியவில்லை.இதையெல்லாம் கேட்டால் ஏன் என் செல்போன்…பேஸ்புக் இதையெல்லாம்
செக் பண்ணுகிறாயா…?என்னை சந்தேகப்படுகிறாயா…?என்பது போன்று கேள்விகள் தன் கணவரிடமிருந்து
வரும் வீணாகப்பிரச்னை என்று நினைத்து மவுனம் காத்தாள் அவள்.
அவனும் ஆபிஸூக்கு டைம் ஆவதால் கிளம்பிவிட்டான்.அப்பாடா தப்பித்தோம்
என நினைத்தாள் மனைவி.
ஆனால் கணவன் விடவில்லை.இரவு ஆபிஸ் முடிந்து வந்ததும்,சாப்பிட்டுவிட்டு..படுக்கைக்குச்
சென்றான்..தன் மனைவியை படுக்கையில் அவளை அமர வைத்து ”உனக்குள் என்ன பிரச்னை என்னிடம்
சொல்”.என்று மறுபடியும் கேட்டான்.
இவளால் பதில் சொல்லாமல் தப்பிக்கமுடியவில்லை.அதே நேரம் அழுகையும்
கண்ணை முட்டிக்கொண்டு வந்தது.அழ ஆரம்பித்துவிட்டாள்.
என்ன ஆச்சு ஏன் இப்படி அழறே..?எதா இருந்தாலும் சொல்லு…சொல்லாமல்
அழதா நான் என்ன பண்றது.ப்ளீஸ் அழுறத நிறுத்து.என்று அவளது கண்ணில் வரும் கண்ணீரை துடைத்துவிட்டான்.
இவ்வளவு அன்பாக நடந்துகொள்கிறாரே நம் கணவர் இவரைப்போயா நாம்
சந்தேகப்பட்டோம் ? என்று ஒரு நிமிடம் மனசஞ்சலப்பட்டாள்.ஆனால் அவன் அந்த பெண்ணிற்கு
அனுப்பிய இன்பாக்ஸ் மெஸெஸ்கள் மறுபடியும் ஞாபகத்திற்கு வந்து மேலும் அழுகையை கூட்டியது.
சொல்லிவிடுவது என முடிவெடுத்து,”நீங்க பண்ணுவது சரியா,நான்
உங்க மனைவி இருக்கும் போது,நீங்க செல்போனிலும் ,முகநூலிலும் ஒரு பெண்ணுக்கு வழிந்து
எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கீங்க..நான் தற்செயலா உங்க செல்போனை பார்த்தேன்.அதில் இருந்த
அந்த பெண்ணின் மெஸேஸ் படித்ததும் எனக்கு சந்தேகம் வந்தது.
அதனால் தான் ஒருநாள் நீங்க பேஸ்புக்கில் இருக்கும் போது
போன் வந்துடுச்சு எந்திரிச்சு போய்ட்டீங்க..அப்போ திருட்டுத்தனமா நான் உங்களோட பேஸ்புக்
இன்பாக்ஸை திறந்தேன்.
அதில் அப்பெண்ணுக்கு நீங்க வழிந்து கொண்டு நீதான் என் தோழி அப்படி
இப்படினு என்னைப்பற்றிய குறைகளையும் கூட பகிர்ந்து இருக்கீங்க.அது எனக்குப்பிடிக்கல..அப்பெண்
யார்…?அவள் என்னைவிட அவ்வளவு முக்கியமா…?”என்று தன் மனதில் தோன்றிய உணர்ச்சிக் கோபத்தை,
கணவனிடம் படபடவென்று கொட்ட ஆரம்பித்தாள்.
கணவனின் முகம் மாறியது.இத்தனைநாள் இந்தப்பிரச்னையால் தான்
இவள் இப்படி இருந்து இருக்கிறாள் என்று யோசனையில் ஆழ்ந்தான்.
மவுனம் காத்தான்.இவளும் நன்கு அழுது தீர்த்துவிட்டு,அமைதியாக
அமர்ந்து இருந்தாள்.
சிறிது நேரம் கழித்து,அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
”தெரிந்தோ,தெரியாமலோ…அப்பெண்ணுக்கு
கொஞ்சம் கூடுதல் உரிமையாக மெஸேஸ்கள் அனுப்பியிருந்தால் என்னை மன்னித்துவிடு.
நான் தவறான எண்ணத்தில் அப்படி அனுப்பவில்லை.ஆனால் இன்னொரு
பெண்ணுக்கு கொஞ்சம் கூடுதல் உரிமை எடுத்துக்கொண்டு எஸ் எம் எஸ் அனுப்பியிருப்பதை எந்த
மனைவி பார்த்தாலும் இப்படித்தான் கோபப்படுவார்கள்.
நீ சந்தேகப்பட்டு பார்த்ததை நான் தவறாக நினைக்கவில்லை.இனிமே
நீ என் செல்போன்,முகநூல் இதையெல்லாம் பார்க்கலாம்.என்னுடைய பாஸ்வேர்டு உன்னிடம் சொல்லிவிடுகிறேன்.இனிமே
நமக்குள் ஒளிவு மறைவு வேண்டாம்.
அந்தப்பெண் பேஸ்புக்கில் எனக்கு அறிமுகம் ஆனாங்க.அவங்க திருமணம்
ஆனவங்க தான் கொஞ்சம் அன்போடு பேசியதால் நானும் மனவிட்டு பேச ஆரம்பித்தேன்.அதனால் கூடுதல்
உரிமை எடுத்துக்கொண்டு இருக்கலாம்.
இனிமே அப்படியெல்லாம் அனுப்பல..எப்போவாவது அனுப்பினாங்க..போன்
பேசினாங்க என்றால் மட்டும் கர்ட்டஸிக்கு பேசிட்டு வச்சுடுறேன்.அதையும் கூடிய விரைவில்
கட் பண்ணிடுறேன்.
இதனால் நம் குடும்பத்திற்குள் பிரச்னை வரவேண்டாம்.எனக்கு
நீதான் முக்கியம்,.அநாவசியமாக அடுத்த பெண்ணிடம் நான் பேசி என்ன ஆகப்போகிறது.”
ஆனா நீங்க அனுப்பிய மெஸேஸ்கள் எல்லாம் அதிக உரிமையுடனும்,அப்பெண்ணின்
மீது அளவு கடந்த ப்ரியமுடனும் அனுப்பியிருந்தாக என் மனதிற்குப் பட்டது.அதுதான் பாதிப்பாகி
விட்டது எனக்கு என்றாள்.
அதான் எல்லாவற்றையும் மறந்துவிடு..இனிமே நமக்குள் சந்தேகம்
வரவேண்டாம்.சந்தேகம் வரும்படி நானும் நடந்து கொள்ளமாட்டேன்.என்றதும் கட்டியணைத்துக்கொண்டாள்
அவள்..
அன்றைய இரவு நல் இரவாக ஆனது…..!
.
No comments:
Post a Comment