Saturday 15 June 2013

எல்லாருக்கும் வணக்குமுங்க…..!


நான் ஒரு நாடோடிங்க…..என்னடா,ஆரம்பத்திலேயே அறிமுகம் சரியில்லையேனு நினைக்காதீங்க…நானே என்னைப்பற்றி முழுமையா சொன்னபிறகு என்னைய புரிஞ்சுக்குவீங்கன்னு நம்புறேன்.

என்னால நடக்கமுடியாது,அதுனால என்னையத்தூக்கிட்டுத்தான் போவாங்க.ஒருத்தரால தூக்கமுடியும்,கொஞ்சம் வெயிட்டாயிட்டேன்னா…இரண்டு பேர் தூக்கிட்டு போய் மேடைல பேச நிக்கவச்சுடுவாங்க.

நானும் பலமுறை சொல்லிட்டேன்.என் பேச்சை ரொம்ப பேர் கேட்டுட்டே இருக்காங்க.எனக்கு அதுல விருப்பம் இல்ல.

சிலர்  நான் பேசுறதை நல்லதாக பேசுறாங்க,சிலர் அதையே சர்ச்சையா பேச ஆரம்பிக்கிறாங்க.அதுனால என்னைய விட்டுடுங்கப்பான்னு மெளவுனமொழில கூட கெஞ்சிப்பார்த்துட்டேன்.ஆனா விடமாட்டேன்றாங்க.

ஒரு சிலர் நல்ல விசயங்கள்,தகவலா தருகிறேன் என்று ஆர்வமுடன் கேட்டு ரசிப்பாங்க.அப்போதெல்லாம் சந்தோஷமா விசயங்களை வாரிவாரி வழங்குவேன்.

சிலநேரம் பார்த்தா எதிர்த்தாப்புல உட்கார்ந்து இருக்கிற,குழந்தை நம்மைளையே முறைக்குறமாதிரி இருக்கும். எப்படா,முடிப்ப என்பதுபோல்,
அப்போ எனக்கே கொஞ்சம் தயக்கமாயிடும்…ஓவரா தான் போறோமோ என்று…..!

சிலர் பேசிட்டு இருக்கும்போது மரியாதை தெரியாம கிளம்ப ஆரம்பிப்பாய்ங்க..

அப்போதான் ஒரு சோர்வு உண்டாகும்..என்னடா இவங்களுக்காக பேச நாம வந்து இருக்கோம்.ஆனா மரியாதை இல்லாம கிளம்பிப்போறாய்ங்களேன்னு வருத்தப்பட்டும் சில நேரம் பேசிக்கொண்டு இருப்பேன்.

ஒருநாள் நான் பேசிட்டு இருக்கும்போது,மேடையில் இருக்கும்  இருவருக்கு சண்டை  வந்து அடிச்சுக்குறாய்ங்க..என்னைய வேற அடிக்கடி பார்த்து,இவனையும் தூக்கி அடிக்கலாமா என்பது போல் முறைப்பாய்ங்க…அப்போ எல்லாம் மனதை கல்லாக்கிக்கொண்டு அமர்ந்து இருப்பேன்.
சரி,நான் பேசுவது சர்ச்சையாகுதா….?இனிமே பேச வேண்டாம் என்று கூட மவுனம் காப்பது உண்டு,ஆனா என்னையத்தட்டி உசுப்பேத்தி எப்படியாவது பேச வச்சுடுவாங்க.

எனக்கும் கம்மியா,அழகா,தீர்க்கமா, இன்னைக்கு பேசனும் என்று தான் ஒவ்வொரு தடவையும் பேச ஆரம்பிக்கும் போது நினைப்பேன்.
ஆனா ஒவ்வொரு வார்த்தையும் சொல்றப்ப நமக்கு தெரிந்ததை சொல்லனும்.நாம சொல்வதைக் கேட்டு இவர்களும் பயன்பெறட்டுமெ என்ற நல்ல எண்ணத்தில் ஃப்லோவா ஆரம்பித்து….அப்படியே எல்லாரும் மயங்குற நிலைமைக்குக் நானே காரணமாயிடுவேன்.

சிலசமயங்களில் எனக்கே பேசிட்டு,எனக்கே தலைச்சுற்றல் ஆரம்பமாகிவிடும்.

ஒவ்வொரு மேடையும் எனக்கு பல அனுபவங்கள் கொடுத்து இருக்கு.
ஆனா நான் யாரையும் ஒருபோதும் மரியாதை இல்லாம திருப்பிப்பேசமாட்டேன்.சில நேரம் என்மீது அமிழத்தை ஊற்றி கழுவும் அளவிற்குக்கூட எதிரில் இருப்பவர்கள் பேசுவார்கள்.அப்போதும் நான் அவர்களின் எதிரொலியாய் தான் இருப்பேன் தவிர திரும்ப காறி உமிழமாட்டேன்.

இப்போ புரியுதாங்க நான் எவ்வளவு நல்லவன் என்று என்னையப் புரிஞ்சுக்காம சட்டமன்றம் பாராளமன்றம்.ஏன் ஐநா சபை வரை கூட கூட்டிட்டுப்போய் ஆச்சரியப்படுத்துவாய்ங்க…

ஆனா அங்கேயும் சில சமயங்களில் எனக்கு சரியான மரியாதை தர்றது இல்ல. என்னைத்தூக்கி அடிச்சு அவங்க பேர் வாங்கிக்கப் பார்ப்பாங்க.
நான் எப்படிப்பேசினாலும்,என்னை வாய்யில்லாப்பூச்சியாத்தான் ஒருசிலர் பார்க்குறாங்க……

என் வளர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கும் இவர்களை நம்பிதான் நானும் இத்தனை நாட்களா வாழ்ந்துட்டு இருக்கேன்.

இதெல்லாம் வேண்டாம் நாமதான் நல்லாப்பாடுவோமே என்று  பாட ஆரம்பிச்சா….அதுக்கும் நல்லாயிருக்கு,நல்லா இல்ல என்று ஆயிரம் விமர்சனங்கள் என் மீது,இதெல்லாம் தாங்கிட்டு நான் ஏன்….?நான் ஏன்..?

நான் ஏன் இப்படியே இருக்கேன்ன்ன்னா……………..

சரி என்னைய நம்பியும் ஒரு குடும்பம் இருக்கே….என்ற நல்லெண்ணத்தில் தான்.

இப்ப சொல்லுங்க நான் எவ்வளவு நல்லவன்னு……?

நான் யாருன்னு தெரிஞ்சிட்டீங்களா…?

:
:
மைக்கு…..மைக்கு………..!

1 comment: