Thursday 3 October 2013

காசு பணம் துட்டு மணி மணி.....!

புரட்டாசி மாதம் வந்தாலே போதும் காய்கறி,பழ வகைகள் விலை ஏறிடும் அபாயம் வந்துடும்..அப்படியென்னா புரட்டாசி மாதம் காஸ்ட்லி மாதமா என்று நினைக்காதீங்க…புரட்டாசி மாதம் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் என்ற பெயரில் சைவ  வகைகளை தான் நிறைய பேர் சாப்பிடுவார்கள்.

அந்தமாதம் முழுதும் பெருமாள் சாமிக்கு விரதம் இருந்து வாரவாரம் வீட்டில் தழிகை போட்டு எல்லா வகையான காய்கறிகள் செய்து வைத்து,வடை பாயசம் போன்ற உணவு வகைகளை பரிமாறி,தழை வாலை இலையில் அனைத்தையும் பரப்பி சாமிக்கு முன்னால் படைத்துவிட்டு,பூஜை போட்டு பின்னர் காக்காவுக்கு சோறு வைத்து விட்டு தான் வீட்டில் உள்ளவர்கள் உணவு சாப்பிடுவார்கள்.

சாமி சாப்பிட்டுச்சா ? என்றால் இல்லை …எப்படி சாமி சாப்பிடும்?சிலை,போட்டோ இவற்றிலிருந்து கையை வெளியே விட்டு சாப்பாட்டை எடுத்து எப்படி உண்ணமுடியும்..?அதனால் .சாமிக்கு சமையல் வகையின் வாடையை மட்டுமே காண்பித்துவிட்டு,பின்னர் வெரைட்டியான உணவுகளை நாம் ஒரு பிடி பிடித்துவிடலாம்.இது தான் புரட்டாதி மாதத்தின் உன்னதம்.

சரி சாப்பாடெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்…நாம் ஏன் புரட்டாசி மாதத்தை தேர்ந்தெடுத்து,அந்தமாதம் பெருமாளுக்கு விரதம் இருக்க வேண்டும் என்று யாருக்காவது விளக்கம் தெரியுமா..?இதோ இப்போ தெரிஞ்சுக்கோங்க..

வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும் ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்கப்படுவது புரட்டாசி மாதத்தில் தான். பொதுவாக சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்றாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்குமாம்…(மாதம்மும்மாரி பொழிவது போல் இருக்குமோ...?)

ஒவ்வொரு தெய்வத்துக்கும் தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும். பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்ததாகும். பெருமாள் கோயில்கள் மற்றும் 108 திவ்ய தேசங்களில் புரட்டாசி மாத வழிபாடு மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய ஸ்தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகளை செய்யவும், காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது.

மாதம் முழுவதும் பக்தர்கள் அசைவ உணவுகளை நிறுத்திவிட்டு விரதம் இருப்பார்கள். சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்யமாக படைத்து பெருமாளை வழிபடுவர்.
பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா... கோபாலா... கோவிந்தா... என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர். பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். (அப்போது தான் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகுமாம்,கடன் பட்டவர்கள் கடன் அடைப்பார்களாம்,குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.)

பெருமாள் சாமி குழந்தை பாக்கியம் கொடுப்பார் எனில்,இங்கிருக்கும் ஆண்கள் எல்லாம் எதற்கு..?குழந்தை வேண்டி பெருமாள் கோவிலுக்குச் சென்றாலே போதுமே…?ஒகோ…… இன்ஷியல் பிரச்னை வந்துடுமோ..? எல்லோருக்கும் ஒரே மாதிரி இன்ஷியல் ஆய்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு அப்பாவை அமைத்துக்கொடுத்து இருக்கிறார் பெருமாள்.(எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்க சாமிக்கு)

பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும்.குடும்பத்தினருடன் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன், காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு.

இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் 10 நாட்கள் மிகவும் விசேஷம். அதைத் தான் நவராத்திரி என்றும் தசரா என்றும் கொண்டாடி மகிழ்கிறோம். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். கன்னி ராசி என்பது புதனின் வீடாகும். இங்கு புதன் உச்சபலம் பெறுகிறார். புதன் கிரகம் விஷ்ணுவின் அம்சமாகும். ஆகையால்தான் புரட்டாசி மாதம் பிறந்தவுடன் பெருமாளுக்குரிய விழாக்கள், பிரம்மோற்சவங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. பெருமாளுக்கு புதன், சனி இரண்டும் விசேஷ தினங்களாகும்.

இப்போ தெரிந்ததாங்க ஏன் புரட்டாதி மாதம் இவ்வளவு காஸ்ட்லி மாதம் என்று..,இப்படியெல்லாம் ஒரு தெய்வத்தின் மேல் பயமும்,பக்தியும் வரவைத்து,உனக்கு நன்மை கிடைக்கும் முயற்சித்துப்பார் என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளார்கள்.அதையே காலங்காலமாக நாமும் என்ன காரணம் என்றே கேட்காமல் இந்த விரத நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறோம்.

ஆனால் உண்மையான காரணம் புரட்டாசி மாதம் மழைக்காலம் என்பதால் சூடான உணவு வகைகளை சாப்பிடும் வழக்கம் மேற்கொண்டு இருப்பார்கள்.குளிர்காலத்தில் அசைவ உணவுகள் செரிமானம் ஆவதில் பிரச்னை உண்டாகும் என்பதால் அந்த மாதத்தில் அசைவ வகைகளை தவிர்த்து இருக்கலாம்.
இந்த மாதங்களில் காய்கறிகள் விளைநிலங்களில் அதிக விளைச்சல் இருக்கும்.அதனால் தான் புரட்டாதி மாதத்தில் காய்கறி மட்டும் சாப்பிட்டு அசைவ உணவிற்கு ஒரு மாதம் விடை கொடுத்து செரிமானப் பிரச்னை வராமல் வயிற்றை காப்பாற்றி இருப்பார்கள்.

ஆனால் மழைக்காலங்களில் மாலை நேரம் இருட்டிவிடும்,அதனால் வீட்டில் இருந்து சூடாக செய்து சாப்பிட ஏற்படுத்தப்பட்டது தான் விநாயகர் சதுர்த்தி ஆயுத பூஜை போன்ற விழாக்கள். சுண்டல் கொழுக்கட்டை,அவல்,பொறி போன்ற உணவுகளை செய்து சாப்பிட்டு இருப்பார்கள் என்பது தான் உண்மையான காரணமாக இருக்கும்.ஆனால் பின்னர் வந்த சந்ததியினர் விழா,சாமி,பயம் என்ற ரீதியில் மக்களை முட்டாளாக்கி,இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று ஏமாற்றி நம்ப வைத்து இருக்கிறார்கள்.

அசைவ உணவுக்கு தடை போட வேண்டும் என்று நினைத்தால் அது எந்தமாதமாக இருந்தாலும் தடை போட்டுக்கொள்ள வேண்டியது தான்.அதற்காக ஸ்பெஷல் மாதமாக புரட்டாசியை பயன்படுத்திக்கொண்டதும்,அதையே நம்பி நம் மக்களும் இந்த கொள்கைகளை கடைப்பிடிப்பதும் தான் பெருமாளுக்கே சிரிப்பு வரக்கூடிய விசயமாகும்.


மக்கள் விரதம் கடைப்பிடித்து கோவிலுக்கு வந்து வழிபடுதல் அல்ல…கோவிலில் செலுத்தப்படும் காணிக்கை மட்டும் தான் பெருமாளுக்குத்தேவை.ஏனெனில் குபேரன் கடனை அடைக்க பணம் மட்டுமே உதவும்,பணத்தைக்கொடுத்து தன் மனைவியை மீட்டெடுக்க பாடுபடும் பெருமாளை ஏமாற்றாதீங்க..ப்ளீஸ் எல்லோரும் கோவிலுக்குச் சென்று காணிக்கை செலுத்துங்க…!

1 comment:

  1. /// புரட்டாசி மாதம் மழைக்காலம் என்பதால்... ///

    அப்படியா...? சுவாமியே சரணம் அய்யய்யோப்பா...!

    ReplyDelete