Sunday 6 October 2013

சுவேதா......!(என்னுள் ஆணின் அகிம்சை...பெண்ணின் இம்சை..) 1

போர்த்திக்கொண்டு தூங்கிற பழக்கம் என்னுள் எப்போது புகுந்தது என்று தெரியவில்லை.நிறைய நேரங்களில் அதைத்தான் கடைப்பிடிக்கிறேன்.இது சரியா,தவறா என்று தெரியவில்லை.ஆனால் இது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.தூக்கம் வரவில்லையெனினும் போர்வை இழுத்து பிடித்து படுத்துக்கொள்வதில் இருக்கும் சுகமே தனிதான்..

ஒரு போர்வை போர்த்திக்கொண்டு தூங்குவதிலேயே இத்தனை சுகம் காணும் நம் மனது..இரு போர்வையை ஒன்றாக சுருட்டி,தன் மீது போர்த்திக்கொண்டு, தன் மனபாரத்தை எக் காலத்திலும் வெளியில் தெரியாதபடி உடல் முழுதையும்,உடலுக்குள் இருக்கும் தன் மனதையும் வெளிக்காட்டாமல் போர்வைக்குள் போர்த்துக்கொண்டு,குளிரிலும்..வியர்த்து  வாழப்பழகிப்போன நான்…

ஒரு ஆணின் உள்ளத்தில் இரத்த சிவப்பாய் வழியும் பெண்ணின் அரிதாரத்தை பூசிக்கொண்டவன்(ள்).நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் ஜெயிக்கப்போகும் போரினைப்போல..,என் எண்ணங்களுக்கும்,உடலுக்கும் இடையே நடந்த உரிமைப்போராட்டம் பற்றி என்னை நானே திரும்பிப்பார்க்கும் பார்வையாகவும்..என்னிலிருந்து நீங்கள் என்னைப்பற்றி என்ன அறிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கிலும் தான் என் ”சுய”நிலையை சொல்ல முன் வந்து இருக்கிறேன்.

எனக்குத்தெரிந்த,என் வாழ்க்கையில் நடந்த,என்னை நானாக்கிய,நாட்களை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி தான் சுவேதா என்ற என்னை,இதுவரை யாருக்கும் சொல்லாத விசயங்களை,ரகசியங்களை உங்களிடன் பகிர்ந்துகொள்ள வந்து இருக்கிறேன்.என்னை உங்கள் வீட்டில் ஒருவனாக,ஒருத்தியாக பாருங்கள்.அப்போது தான் ஒலி,ஒளி அல்லாமல்,நான் கூறுவதும் ஒரு கதை போல் அமையாமல் உங்களுள் நடமாடிக்கொண்டு இருக்கும் ஒரு கேரக்டராக உருமாறுவேன்.

என் வாழ்க்கையை நான் சொல்லி என்ன பயன்…?அல்லது நீங்கள் கேட்டு தான் என்ன பயன்…? .அதனால் பிறருக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழலாம்…?

என்னில் இருக்கும் தாபத்தீ பற்றி எரியும் வேளையில் நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தி,என் உற்சாக எண்ணங்களை எனக்கும் என்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக என் வாழ்க்கையை மாற்ற முயற்சித்து அதில் வெற்றியும் கண்டு வென்று கொண்டு இருக்கிறேன்.

என்னைப்பற்றி முழுதாக அறிய வேண்டும்,என் ஆணுக்குள் இருக்கும் பெண் தன்மையை பெரிதாக காட்ட வேண்டும்.என் மனப்போராட்டங்களை பகிர்ந்துகொண்டு என் தவிக்கும் வாய்க்கு….சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ள நினைக்கிறேன்.நான் வாழப்பிறந்தவள்(ன்) மட்டுமல்ல வாழ வைக்க பிறந்தவள் என்பதை உலகிற்குக் காட்டும் முயற்சி தான் இந்த வாழ்க்கைப் பயணம் .

என் பயணத்தோடு நீங்களும் பயணிக்க வைக்கத்தேவையான முயற்சிகளை என் வார்த்தைகளில் கொண்டு வர,அந்த வார்த்தையை நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் படைக்க வேண்டும் என்ற அக்கறையுடன் இந்த உண்மை சம்பவ என் வாழ்க்கை நாவலை நீங்கள் காண உங்களோடு பயணிப்பதில் நானும் ஆவலாக……….

தொடர்வோம்….அந்த நீண்ட பயணத்தை……..

நான் என் அம்மாவின் வயிற்றுக்குள் உந்து சக்தியாக யாரோல தள்ளப்பட்டேன்..நீந்தி…நீந்தி பயணம் மேற்க்கொண்டு கடைசியில் ஒரு இருட்டறைக்குள் புகுத்தப்பட்டேன்.அங்கே நான் மிகவும் பயந்தேன்.
எனக்கு தைரியம் சொல்வதற்குக்கூட ஒரு ஆள் இல்லை.தனிமை என்னை வாட்டியது.அப்போது ஆதரவாக ஒரு உருண்டை என்னை தனக்குள் அடக்கிக்கொண்டது.

அந்த உருண்டையின் அணைப்பிலேயே நானும் வளர்ச்சியடையத்தொடங்கினேன்.கொஞ்சம்..கொஞ்சமாக என் இதயத்துடிப்பை நானே அறிய நேர்ந்தது.எனக்கு மிகவும் சந்தோஷம்.என்னுடைய மூச்சுக்காற்றும்,இதயத்துடிப்பும் எனக்கு அருகில் நான் அறியும் வகையிலேயே கேட்பதில் ரொம்ப பேரார்வம் கொண்டேன்.
அடுத்ததாக என் கைகள்,என் கால்கள்,என் உடல்பாகங்கள் எல்லாம் வளர்ந்தது.


ஐந்தாம் மாதம் ஆரம்பிக்கும் சமயம் என் உடலுறுப்பு வளரத்தொடங்கியது.அது மேல் பகுதி நீளமாகவும்,கீழே இரண்டு உருண்டைகளுடன் வளர ஆரம்பித்தது.

வளரும் சுவேதா.....

.....

No comments:

Post a Comment