Sunday 20 October 2013

சுவேதா 2 (என்னுள் ஆணின் அகிம்சை.. பெண்ணின் இம்சை)

ஓ நாம் ஆணாகப்பிறக்கப்போகிறோமோ….இந்த உலகத்தில் என்று சந்தோஷமாக உணர்ந்தேன் என் உள்ளுறுப்புக்கண்டு ஆச்சரியமும் கொண்டேன்.

என்னுடைய கடவுளுக்கு அப்போதே நான் நன்றி சொல்லிக்கொண்டேன்.என் ஆண்மைப்பிறப்பின் சந்தோஷத்தை வெளிவந்து அனுபவிக்க,காலம் இன்னும் ஆகும் என்பதால்  சிறிதுகாலம் அந்த இருட்டறையில் உருண்டைக்குள் ஆதரவாக கை.,கால்களை ஆட்டிக்கொண்டு,,என் வாயினுள் கை வைத்துக்கொண்டு,நகங்களால் நான் தங்கியிருந்த உள் பாகத்தில் தடவிக்கொண்டும்,உள்ளே பொழுதுபோகாமல் விளையாடிக்கொண்டு இருந்தேன். ஆனால் இங்கே என் அம்மாவோ என்னுடைய சேட்டைகளை ரசிக்கக்கூட முடியாமல் சோகத்தில் ஆழ்ந்து இருந்தாள் என்பது எனக்கு அப்போது தெரியாது.

தெரிந்து இருந்தால் கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே…என்று சிந்து பைரவி யில் வரும் பாட்டு மாதிரி கலைந்து போய் இருப்பேன். ஆனால் எனக்கு அப்போது உள்ளுக்குள் நடக்கும் விசயம் தெரிய வந்ததே தவிர,என் அம்மாவின் சோதனை காலம் என்பது நான் உள்ளிருந்தகாலம் தான் என்பதை அப்போது உணரவும் இல்லை.உணரவேண்டிய வயதும் எனக்கு இல்லை.

என் அம்மாவின் வலி நிறைந்த நாட்களாய் ஆகிப்போனது என் உயிர் உள்ளுக்குள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் காலம்.
எனக்கு அப்போது தெரியாது.என் அம்மாவும்,அப்பாவும் ஒருவருக்கொருவர் உறவினர் என்பது, என் பாட்டியின் நாத்தனார் பையன் தான் என் அப்பா,அதனால் உறவு விட்டுப்போகக்கூடாது என்பதற்காக என் அம்மாவை என் பாட்டி கட்டிவைத்துள்ளார்.ஆரம்பத்தில் இருந்தே குடிக்கு அடிமையாகிப்போன என் அப்பாவிற்கு என் அம்மாவை சரிவர பார்த்துக்கொள்ள முடியவில்லை.

இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள்தான் நடந்து கொண்டு இருந்திருக்கின்றன. இந்த சண்டைக்கு நடுவில் என் அப்பா அம்மா இருவருக்கும் இருந்த அன்பிலும்,ஆசையிலும்,காமத்திலும் நானும் எனக்கு முன்பாக என் அக்காவும் கருப்பைக்குள் வாழ வேண்டியதாகிவிட்டது. என் அக்கா எனக்கு முன்பாக இவ்வுலகத்தைக் காண வெளியேறிவிட்டாள். அடுத்துதான் நான் உருவாக்கப்பட்டு கருப்பைக்குள் வளர்ந்து கொண்டு இருக்கிறேன்.

பம்பாயில் தான் என் அம்மாவும்,அப்பாவும் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறார்கள். என்னை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த என் அம்மாவிற்கு பசியும் வேதனையும் தான் மிஞ்சியிருக்கிறது. அதனால் என் அம்மா ,அப்பாவிடம் சொல்லிக்கொள்ளாமல் ரயில் ஏறி எங்க அக்காவை கையிலும் என்னை வயிற்றிலும் சுமந்துகொண்டு ரயிலில் சாப்பிடக்கூட காசு இல்லாமல் பட்டினியாக சேத்துப்பட்டில் உள்ள என் பாட்டி வீட்டிற்கு வந்து தஞ்சம் அடைந்தார்.

என் பாட்டி ஆயிரம் சமாதானப்படுத்திப்பார்த்தும் என் அம்மாவிற்கு என் அப்பாவின் மீது இருந்த கோபம் குறையவே இல்லை. நாளடைவில் என் பாட்டியும் அறிவுரை செய்வதையும், மருமகனுடன் சென்று வாழ் என்று சொல்வதையும் கைவிட்டாள்.

நான் பிறக்கும் நாள் வந்தது. எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம் என் அம்மாவை சந்திக்கப்போகிறேன். வெளி உலகத்தை காணப்போகிறேன்..இந்த நாளுக்காக எத்தனை நாள் ஒரு உருண்டைக்குள் என் வாழ்க்கையை அடைத்துக்கொண்டு இருந்தேன்.அப்பாடா,விடிவு காலம் வந்தது.

இப்போது என் தலை சுற்றி என் அம்மாவிடமிருந்து இருந்து மெல்ல மெல்ல  வெளியேறுகிறேன். மூச்சு முட்டுகிறது.
நானும் என் சுவாசத்தை இழுத்து விட்டுக்கொண்டு வெளியில் வந்து கொண்டு இருக்கிறேன். வெளி வரும் வழியில் வலி தாங்காமல் என் அம்மா கத்தும் சத்தம் என்னை பயப்பட வைத்தது. அந்த சத்தத்தில் நானும் பயந்து போய் கத்த ஆரம்பித்தேன்.

ஒரு வழியாக அம்மாவிடமிருந்து வெளிவந்து விழுந்துவிட்டேன். ஒரு ஆதரவுக்கை என்னை தாங்கிப்பிடித்தது.தலைகீழாக தொங்கவிட்டது.
எனக்கு இத்தனை நாளாக என் அம்மாவின் தொப்புள் கொடி மூலம் வந்த உணவு வழியை வெட்டி எடுத்தனர். வலியில் நானும் என் அம்மாவும் ஒரு சேர கத்த ஆரம்பித்தோம்.

என் அம்மாவிடம் உனக்கு சிங்கக்குட்டி மாதிரி ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கு என்று என் முகத்தை என் அம்மாவிடம் காண்பித்தார்,  பொம்மை போன்ற உருவத்தில் அங்கிருந்த செவிலி.

நானும் என் அம்மாவின் முகத்தை காண கண் முழித்துப்பார்த்தேன்.அம்மாவின் உருவம் தெரிந்தது.அம்மாவின் முகத்தை கண்டு சந்தோஷத்திலும்,பசியினாலும் மேலும் அழுதுகொண்டே இருந்தேன்.

அய்யா நாம் நம் அம்மாவை கண்கலங்க வைத்துவிட்டு வந்துகொண்டு இருக்கிறோமா…?என்ற பாரத்துடன் வெளியில் வந்து விட்டேன்.
‘’ஏய் இங்கபாருடி…உனக்கு ஒரு ஆம்பிள்ள குட்டில பிறந்து இருக்கான்.கண்ண முழிச்சு பாரும்மா…’’என்று என் அம்மாவின் கன்னத்தில் என் பாட்டி கைகளால் தட்டி என்னைக் காண்பித்துக்கொண்டு இருந்தாள்.
என் அம்மா என்னைப்பார்த்தார். அழுதுகொண்டே…,என் நெற்றியில் தன் உதடுகளால் ஈரத்தை பதித்தார். எனக்கும் என் அம்மாவிற்கும் ஆன உறவு அன்றிலிருந்து வெளியுலகத்திற்கு வந்துவிட்டது.

இனி என் வாழ்க்கை வெளியுலக வாழ்க்கையை மையப்படுத்திபோகும்…இதில் இடஞ்சல்,சங்கடங்கள்,சந்தோஷத்தருணங்கள், கேள்விகள், பதில்கள் எல்லாம் நிறைந்ததாகவே இருக்கும்.
ஆனால் நான் நிறைந்தவனாக வாழ்ந்தேனா…..கேள்விகள் அடங்கிய கோப்பைகள்…அதில் ஒவ்வொரு சொட்டுத்தண்ணீராக விடுகிறேன். தாகம் தீர்க்க போதுமானதாக இல்லையெனினும்..உசுரு பொழைக்க இந்த நீர் உதவக் கூடும்.அதனால் எல்லாரும் ஒரு சொட்டு நீரை தொட்டு பருகிக்கொள்ளுங்கள்.


வளரும் சுவேதா… 

No comments:

Post a Comment